கட்சியின் ஸ்தாபக நோக்கங்களுக்கு இன்றைய தலைமை நெருங்கி வருகிறதா?

Asraf-எம்.பௌசர்- 

முதலில் ஒன்றை சொல்லிப் போட வேணும், இந்த தீர்மானங்களை நான் ஊடகங்களில்தான் படித்தேன். ஊடகங்களில் வெளிவந்துள்ள தீர்மானங்கள் உண்மையில் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தானா? என்பதை உறுதிப்படுத்தும் மார்க்கம் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. மு.கா மாநாட்டு தீர்மானங்களை படிக்கும் உத்தியோகபூர்வ வாய்ப்பு ஏதாவது உண்டா என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இப்படி சொல்வதற்கும் ஒரு காரணமிருக்கிறது, அது என்னவெனில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கும்,முஸ்லீம் காங்கிரசின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மு.காவின் பேராளர் மாநாட்டு தீர்மானங்கள் ஒரு அரசியல் பாதையை வேண்டி நிற்கின்ற போது, கட்சித் தலைமையின் பாதையோ இதற்கு மாற்றாக இருந்து வந்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் கட்சியின் ஆழமான தொண்டு, அர்ப்பணிப்பு உறுப்பினர்களும் கட்சியின் தலைமையும் ஒரே தளத்தில் கூடி விடயதானங்களை/பிரச்சினைகளை விவாதிப்பதற்குள்ள ஒரே தளமான ஒரு திறந்த ஜனநாய அரங்காக இந்த பேராளர் மாநாடு (கட்சி யாப்பின் அர்த்தப்பாட்டின் அடிப்படையில்) அமைவதால், மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களின் உணர்வுகள் பெருமளவில் இத்தீர்மானங்களில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஊடக செய்திகளின் படியும் இம்மாநாட்டில் கலந்து கொண்ட நண்பர்களின் கருத்துப் படியும்,கட்சி தலைமையின் மாநாட்டு உரையின் படியும் முஸ்லீம் காங்கிரஸ் பேராளர்கள் தமது உணர்வினையும், அதிருப்தியையும் பெருமளவில் தலைமைக்குழுவிற்கு முன் தெரியப்படுத்தி உள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது.

பேராளர்கள் மகாநாட்டு பிரதானமான தீர்மானங்களின்படி…. 

*தேசிய இனங்களுக்கு அதிகாரப் பகிர்வினை கோரும் ஒரு அரசியல் இயக்கமாக தன்னை இந்த பேராளர் மாநாட்டு முதல் தீர்மானத்தின் ஊடாக பிரகடனப்படுத்தி உள்ளது.

* இந்த அதிகாரப்பகிர்விற்கான குறைந்தபட்ச அரசியல் நிர்வாக வடிவமாக மாகாண சபை முறைமையை அது கோருகிறது. இந்த அலகிற்கான உரிய நியாயமான அதிகாரப்பகிர்வை கோருவதுடன், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பறிப்பை, மத்திய அரசு மேற்கொள்வதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கிறது, அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்கிற தெளிவான செய்தியை முன்வைக்கிறது.

*அடுத்த கட்டமாக முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் என்கிற வகையில் அதிகார பகிர்வில் முஸ்லிம்களுக்குள்ள உரிமைகள்/ சட்ட பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகிறது.

* தேசிய இனமான முஸ்லிம்களுக்கு எதிராக சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இன/மத/பொருளாதார/பண்பாட்டுத் தளத்திலான அச்சுறுத்தல்கள் குறித்த ஒரு மெல்லிய அவதானத்தினையும், தமது அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது.

*இடம்பெயந்துள்ள முஸ்லிம்களுக்கான காப்பீடுகள்/அவர்களுக்கான பௌதீக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன், புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக் குமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்துகிறது.

*பலஸ்தீன மக்களுக்கான தனது ஒருமைப்பாட்டினை தெரிவிக்கிறது.

இந்த நியாப்பாடுகளுக்காகவும், தீர்மானங்களுக்காகவும் கட்சி அரசியல் ரீதியாக போராடும்,இதன் குரலாக இருக்கும் என சொல்கிறது.

இப்பேராளர் மாநாடு பற்றியும், இத்தீர்மானங்களின் முக்கியத்துவம் பற்றியும் இங்கு சாராம்சப்படுத்தி எழுதப்படுவதற்கான பிரதான நோக்கம், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள.

தீர்மானங்களின் முக்கியத்துவம் கருதியும், மாநாட்டு தீர்மானங்களை படிக்கின்ற போது மு,காவை உருவாக்கிய இதன் ஸ்தாபகர்களான மர்ஹும்களான அஹ்மத் லெப்பை, எம்.எச்,எம்.அஷ்ரப் ஆகியோரின் கட்சி ஸ்தாபக நோக்கங்களுக்கு இன்றைய தலைமை ஓரளவு நெருங்கி வருகிறது என்கிற தோற்றப்பாடு நமது பிரமைகளின் வழிமேல் வருகிறது. இது வெறும் தோற்ற மயக்கமாக இருந்து விடக் கூடாது என்கிற எதிர்பார்ப்பும் எழுகிறது.

அடுத்த பேராளார்கள் மாநாடு கூட்டப்பட்டு, மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் வரை ,கட்சி யாப்பிற்கு அடுத்த படியாக கொள்கை/செயற்பாட்டு வழிகாட்டியாக இத் தீர்மானங்கள் அணுகப்படுவதே பேராளர்கள் மாநாடு ஒன்று நடைபெறுவற்கான பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். அடுத்ததே கட்சியின் உத்தியோக நிர்வாகிகளின் தேர்வை பேராளர்களின் முன்வைத்து ஒப்புதல் பெறுதலாகும்.

இத்துடன் மிக முக்கியமாக பேராளர்கள் என்பவர்கள்தான் கட்சியின் தூண்களாகும், இவர்கள் கலந்து கொண்டு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தான் கட்சியின் கொள்கை /வழிமுறையை பிரதிபலிப்பதாகும். அரசியல் குழுவோ, தலைமையோ, இத்தீர்மான வரன்முறைக்கு வெளியில் கட்சியை வழிநடாத்த முடியாது. ஆகவே கட்சி பேராளர்கள் தமக்குள்ள முக்கியத்துவத்தினையும், இத்தீர்மானத்தின் அரசியல் தன்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தலைமை எச்சந்தர்ப்பத்திலும் இத்தீர்மானங்களுக்கு வெளியில், இத்தீர்மானங்களுக்கு மாற்றாக நடக்க அனுமதிக்கக் கூடாது! நமது பொறுப்பினையும் கடமையையும் நாமும் உணர தலைப்படுவோம். நாமும் “அல்லாஹு அக்பர்” என சொல்லித்தான் இத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். நாமும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துத்தான் இத்தலைவர்களை வளர்த்து ஆளாக்கி உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*