உலமாக்களை சந்திக்கு இழுத்துவிட்டு சோம்பேறிகளாக அரசியல் தலைவர்கள்! காலாவதியாகியும் விட்டனரா?

Atha-மானா-

சொகுசு வாகனங்கள், ஸ்ராவஸ்தியில் புகலிடம், மாதம் முடிந்தால் சம்பளம், இதர சலுகைகள், கோட் சூட் என்று சமூகத்தில் என்னதான் நடந்தாலும் சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கெல்லாம் தவறாமல் போகும்- அறிக்கை விடும்- மஹிந்த குடும்பத்தை அதீத சக்தி படைத்தவர்கள் என்று புகழும்- பாதாள உலகத்தின் உதவியில் சண்டித்தனம் செய்யும்- அதில் முஸ்லிம்களையும் தள்ளி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைக் காவு கொடுத்த வரலாறு படைத்த வல்லவர்கள்- தாதாக்களின் கையைப் பிடித்து கொஞ்சுவோர்- பாராளுமன்றத்தில் மேசை மேல் ஏறி நாட்டியம் போட்டுக் கூச்சல் போடுவோர்- எல்லா மொழியிலும் எமது சமூகத்தை மாத்திரமே சமாளித்து விட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவோர் என்று ஒவ்வொரு வகைக்குள்ளும் அடங்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எங்கே?

அவர்கள் குரல்கள் எங்கேதான் போய்த் தொலைந்தது என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஏங்கும் காலமிது.

காலாவதியான பண்டங்களாக முஸ்லிம் தலைவர்கள்!

அப்படியொன்றுமே நாட்டில் நடைபெறுவதில்லை போன்று காலாவதியான ‘பண்டங்களாக’ இவர்கள் இன்று இருக்கிறார்கள். சமூக சேவைக்கு வருவோர் அதிலும் அரசியல் ஊடாக சமூக சேவைக்கு வருவோர் ஒரு சமூகத்தின் கனவை, எதிர்பார்ப்பையும் சுமந்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள், நாடாளுமன்றத்துக்கும் அனுப்புகிறார்கள்.

சமூகப்பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் அறிந்து அதற்கான தீர்வுகளைத் தேடுவார்கள் எனும் நம்பிக்கையை வளர்த்ததனால் தான் இவர்களை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இவர்களோ சமூகத்துக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை அது தம் காலடிக்கு வந்து யாராவது சொன்னால் தான் தமக்குத் தெரியும் எனும் பாணியில் ஈரமற்றவர்களாக இருக்கிறார்கள்.

Rizath (2)அநுராதபுரத்தில் இனவாதம் ஆரம்பித்த போது நாம் பேட்டி கண்ட அமைச்சர் இதைத்தான் எம்மிடம் சொன்னார். அநுராதபுர மக்கள் என்னிடம் இன்னும் அதைப்பற்றி முறையிடவில்லை, முறையிட்டால் தான் நான் தலையிட முடியும் என்றார்.

நீங்களும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தானே சொல்லாமலே சென்று ஏன் உங்களால் தலையிட முடியாது என்று கேட்டதற்கு, நீங்கள் அவசியமற்ற விதத்தில் கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.

நல்லது, ஒவ்வொரு தலைவருக்கும் இப்படியான ஒரு வரையறை தேவைப்படுகிறது. அவரவர் சொகுசு வட்டத்திற்குள் வாழத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

சரியோ – பிழையோ, அரசியலோ – மனிதாபிமானமோ, ரிஸானாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து கருணாநிதி கூட பேசியிருந்தார். இதுதான் அவரது அரசியல் அனுபவம். சமூகத்தில் காலத்துக்குக் காலம், நாளுக்கு நாள், விநாடிக்கு விநாடி நடைபெறும் அனைத்து விடயங்கள் குறித்தும் தகவலறியத்தான் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட கையிற்கும் காலுக்குமாக சுற்றி ஒரு பட்டாளத்தை வைத்துக்கொள்கிறார்கள், அதில் சிலருக்கு அரச சம்பளம் வேறு.

இப்படி எத்தனை பேர் இருந்த போதும் அவ்வப்போது இடம்பெறும் விடயங்கள் குறித்து உடனுக்குடன் பேசும், குரல் கொடுக்கும், காரியமாற்றும் திறனற்ற சுயநலவாதத் தலைவர்களை உருவாக்கி அவர்களிடம் தஞ்சமிருப்பதை நினைத்து முஸ்லிம் சமூகம் வெட்கப்படவேண்டும்.

மறைந்த சுவருக்குள் அரசியல் நடவடிக்கை!

அரசில் இல்லாத ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆகக்குறைந்தது அறிக்கையாவது விடுகிறார்கள், ஆனால் அனைத்தும் பெற்றுச் சுகவாழ்வு வாழும் தலைவர்கள் மறைந்த சுவருக்குள் தான் ‘நடவடிக்கை’ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நடவடிக்கை எடுத்து எடுத்து சாதாரண சியாரத்தை உடைக்க ஆரம்பித்தவர்கள் இன்று தலை மேல் ஏறி நின்று “முஸ்லிம்கள்” எனும் அடையாளத்தையே கை விடு என்று கேட்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள், ஆனால் இவர்களோ இன்னும் “ஆராய்ச்சி” செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சினைக்கு வீட்டின் தலைனின் வார்த்தை எவ்வளவு ஆறுதலானதும் அவசியமானதுமோ அதை விட அவசியமானது ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளின் காலத்துக்கு அவசியமான நடவடிக்கையும் குரலும். ஆனால், பதவி மோகத்தில் இருக்கும் முஸ்லிம் தலைவர்களோ சமூகம் எக்கேடு கெட்டாலும் அவர்கள் விரும்பும் நேரத்துக்குத் தான் வெளியே வந்து பேசுவோம் என்று காலாவதியாகிக் கிடக்கிறார்கள்.

விஸ்வரூபம் என்றொரு திரைப்படம் உருவாக்கியிருக்கும் சமூகப் பிரச்சினையை ஆராய தென்னிந்தியாவில் அத்தனை முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்தன, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து தோளோடு தோள் நிற்கிறார்கள், குரல் கொடுக்கிறார்கள், அவர்களது ஆணித்தரமான குரல் மூலம் அனைவரும் சிந்திக்க வைக்கப்படுகிறார்கள், தவறுகள் மீள ஆராயப்படுகின்றன. இதிலிருந்து ‘ஒற்றுமைக்கும்’ தகுந்த காலத்தில் நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ‘குரலுக்கும்’ எத்தனை அவசியம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தினரைப் பாராட்ட வேண்டும், சமூகத்தின் தேவைக்காக அரசியல் வாதிகளில் தங்கியிராது நேரடியாகக் களமிறங்கியிருந்தமை பாராட்டத்தக்கது, ஆனால் அதை சினிமாவோடு, எங்கோ இருக்கும் எதிரியோடு நிறுத்தி விடாமல் உள் நாட்டில், கையளவு தூரத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்காக அனைத்து அமைப்புகளையும், தலைவர்களையும் ஒன்று சேர்த்து போராடும் நாட்டமும் அவர்களிடம் வரவேண்டும்.

மனம் வேதனைப்படுகிறது!

தாம் சார்ந்த சமூகத்துக்காகத் தம்மால் குரல் கொடுக்க முடியவில்லை, நீதியை நிலை நாட்ட முடியவில்லை என்றால் அல்லாஹ்வுக்குப் பயந்தாவது (சமூகத்துக்கு) எந்தப்பிரயோசனமும் இல்லாத பதவிகளை விட்டெறிந்து விலகி நிற்கக்கூட தைரியமில்லாத கோழைகளாகவும் பதவி மோகம் பிடித்தவர்களாகவும் இவர்கள் இருப்பதை நினைக்க மனம் வேதனைப்படுகிறது.

எதிர்ப்பை வேண்டாம், ஒற்றுமையைக் காட்டுவதற்காகவாவது இத்தனை தூரம் சமூகம் அல்லல்பட்டு, பயத்திலும் பதற்றத்திலும் வாழும் போதாவது இந்த காலாவதியான அரசியல் பிரதிநிதிகள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம், அவர்கள் தவறியதன் பின் ஜம் இயத்துல் உலமா பக்கம் பார்வையை பல வந்தமாகத் திரப்பி மார்க்க அறிஞர்களை அரசியல் வாதிகளாக மாற்றுகிறார்கள்.

இறுதியில் ரிஸ்வி முப்தியின் தலை உருளுகிறது, உலமாக்களின் தலை உருளுகிறது, அவர்களும் நாங்கள் மார்க்க அறிஞர்களேயன்றி அரசியல் வாதிகள் இல்லை எனும் வரையறையை உணர்ந்து நாட்டின் அரசியல் விவகாரத்திலிருந்தும் விலகி நின்று அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து சமூகத்துக்கு நல்லது செய்யலாம் என்றில்லாமல் ‘தெரிவு செய்யப்படாத’ மக்கள் பிரதிநிதிகளாக அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதன் விளைவு? பொது பல சேனா எனும் மத சார்ந்த அமைப்பு அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் சமூகத்தோடும் மார்க்கத்தோடும் கலந்து அவர்கள் ‘பொளத்தவாத’ தீவிரத்தை முன்னெடுக்கிறார்கள்.

உலமாகளை சந்திக்கு இழுத்துவிட்டு சோம்பேறிகளாகச் அரசியல் தலைவர்கள்!

Hakeem (5)இதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்ணவில்லையா? ஜம் இயத்துல் உலமா முடிவெடுத்துச் சொன்ன நாளில்தான் பெருநாள் கொண்டாடவில்லையா? இல்லை, ஜம் இயத்துல் உலமா வரையறையிட்ட மார்க்க விடயங்கள் படி நடக்கத்தான் இல்லையா? எல்லாம் நடந்தது,

காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருந்தது ஆனால் இப்போது அவர்களை வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து விட்டு சோமபேறிகளாகச் சம்பளம் வாங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தக் காலாவதியான தலைவர்களால் நாட்டின் இஸ்லாமிய சமூகம் பெரும் தொல்லைக்குள்ளாகிறது.

குளியாப்பிட்டியில், மஹரகமவில், தெஹிவளையில், அநுராதபுரத்தில், நாட்டில் எங்கெல்லாம் எது நடந்தாலும் அது நடக்கப் போகும் விடயம் முன் கூட்டியே தெரிந்த வலுவான அரசாங்கம் தான் இது. அப்படிப்பட்ட அரசாங்கம் கூட நடந்த பிறகு இந்த முஸ்லிம் தலைவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள் என்றுதான் பார்க்கிறது. ஆகக்குறைந்தது குளியாப்பிட்டி சம்பவத்திற்கு அங்கிருக்கும் பிரதிநிதி சத்தார் ஓடித்திரிந்தார் என்பது ஆறுதலான விடயம்.

பொது பல சேனா மிகத்தெளிவாக சலபிகள்,வஹாபிகள் என்று முஸ்லிம்களைத் தரம் பிரிக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது, தப்லீக், ஜமாஅத் இஸ்லாமி என்ன செய்கிறது என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது, உங்களுக்குள் முரண்பாடுகளைக் களையுங்கள், முஸ்லிம்கள் தான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று ஜனாதிபதி சொல்கிறார். மல்வத்து ஓயா பீடாதிபதி பொதுபல சேனா காலத்தின் தேவை என்று ஆசீர்வாதம் வழங்குகிறார்.

இதையெல்லாம் அறிந்த குடிமக்கள் எதிர்காலப் பயத்தில் வாழ, இவையனைத்தையும் அறிந்திருக்க வேண்டிய அரசியல் வாதிகள் ஏறத்தாழ Out of date அயிட்டங்களாகப் போய் விட்டார்கள். காலத்தின் தேவையறிந்து ஒலிக்காத உங்கள் குரல் யாருக்கு வேண்டும்? சமூகத்தின் தேவை புரிந்து, பிரதேசப் பாகுபாடுகள், எல்லைகள் கடந்து உங்களால் ஏன் ஒற்றுமையாக நிற்க முடியவில்லை? அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் சேர்ந்த ஒரு ஒற்றுமையான குரலை ஏன் உங்களால் வெளியில் கொண்டு வர முடியவில்லை? இதில் நான் பெரியவன் நீ பெரியவன் , உன் கட்சி பெரிது, என் கட்சி பெரிது என்று போட்டி போடுவதற்கு என்ன இருக்கிறது?

உங்கள் ஒற்றுமையான குரல் ஒலிக்காத வரை, அல்லது ஒற்றுமையான குரலை சமூகத்துக்காக ஒலிக்கச் செய்யாத வரை பெருகி வரும் இனவாதத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் இன்னல்களுக்கு அளவிருக்கப்போவதில்லை.

இதில் ஒரு பங்கு முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கிறது, ஏனெனில் நீங்கள் கேள்வி கேட்பதில்லை மாறாக அடிபணிந்து வாழவும் அவர்கள் மூலம் ‘ஆகக்கூடியவை’ என நம்பும் சிறு சிறு விடயங்களுக்காக அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள், உங்களுக்குள்ளும் பல பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், இயக்க வேறுபாடுகள் ஆனால் இறுதியில் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகமும் ஏனெனில் நீங்கள் அனைவரும் ‘முஸ்லிம்கள்’ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*