பொதுபல சேனா மீது பாயாத சட்டம் ஆசாத் சாலி மீது பாய்ந்தது ஏன்? சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசு பாரபட்சம்!

haniffa-mathani-2சட்டத்தை சமமாகப் பிரயோகப்படுத்த வேண்டியது தார்மீக அரசாங்கத்தின் கடமையாகும்! அரசாங்கம் இந்த தார்மீகப் பொறுப்பிலிருந்து விழுவிச் செல்வதாக சிறுபான்மை இன மக்களின் பார்வையில் இப்போது சந்தேகம் எழுந்துள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனீ விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

‘நமது நாட்டில் அண்மைக்காலமாக இனவாதத்தையும், மதவாதத்தையும் பகிரங்கமாகப் பேசி சிறுபான்மை மக்களின் மனங்களில் கிலேசங்களைக் கிளப்பிக் கொண்டிருந்த பொது பல சேனாவின் முக்கியஸ்தர்களையும், ஹெல உறுமயவின் அமைச்சர்களையும் அரசாங்கத்தின் சட்டம் கைது செய்யவில்லை.’

ஆனால் முஸ்லீம்களின் வணக்கஸ்தலங்களான பள்ளிவாசல்களை பட்டப்பகலில் உடைத்து, முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவைக் கேலி செய்து, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை உடைத்துக் கொள்ளையிட்டதை இனவாதத்தைத் தூண்டுகின்ற செயல் எனக் கண்டித்து சிறுபான்மை, பெரும்பான்மை என்பதற்கு அப்பால் நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரான ஆஸாத் சாலி அவர்களை பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் கைது செய்து தடுப்புக் காவில் வைத்திருப்பதானது சிறுபான்மை மக்களின் பால் அரசாங்கமானது சட்டம், நீதி என்பவற்றை தொடர்ந்தும் ஓரக்கண்ணாலேயே பார்த்து பாரபட்சமாகச் செயற்படுத்தி வருகின்றது என்பதையே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.’

தாங்கள் உத்தியோகப்பற்றற்ற பொலீஸ்காரர்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம். என்றும் இன்னும் பலரை இதில் இணைத்துக் கொள்ளவுள்ளோம் என்றும் சட்ட விரோதமாகப் பேசியும் சட்டத்தைப் பகிரங்கமாகவே கையில் எடுத்துப் பந்தாடி மேடைகளில் பிரச்சாரங்கள் மேற்கொண்டும் வந்த பொது பல சேனா முக்கியஸ்தர்களை இந்த நாடு நன்கறியும்.’

அதேபோன்று பட்டப்பகலில் பயங்கரவாத சுலோகங்களுடனும் இனவாதக் கோஷங்களுடனும் வீதிகளில் வலம் வந்து புனிதமான பள்ளிவாசல்களையும், கோவில்களையும் உடைத்துத் துவம்சம் செய்தவர்களை காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் நாமறிவோம்.’

இவர்களுக்கு எதிராகவெல்லாம் இனவாதத்தைத் தூண்டியதாகவோ அல்லது மதவாதத்தைத் தூண்டியதாகவோ எந்தவிதமான குற்றப் பத்திரிகைகளையும் இதுவரை தாக்கல் செய்யாத பொலீசாரும், புலனாய்வுத் துறையினரும் இப்போது இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த ஆஸாத் சாலியை மட்டும் கைது செய்து தடுப்புக் காவலில் அடைத்து வைத்துள்ளமையானது இந்த அரசாங்கத்திற்கு நாடு தழுவிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.’

சட்டமும், நீதியும் நாட்டின் எல்லா மக்களுக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் ஏழை பணக்காரர் என்கிற பாகுபாடோ, சிங்களவர் தமிழர், முஸ்லிம் என்கிற பாரபட்சமோ அல்லது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பார்வைகளோ இருக்கக் கூடாது. ‘இன்று ஆஸாத் சாலி. நாளை யார்?’ என்பது இப்போது எல்லோரது மனங்களிலும் ஊசாடத் தொடங்கியுள்ளது.’

பிழையான எடுகோள்களில் இடம்பெறும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது நாட்டுக்கும், மக்களுக்கும் ஒரு போதும் நன்மை பயக்காது. இதுபற்றி ஏலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் அரசின் உயர்மட்டத்திற்கு தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.’

‘நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் அமுல்படுத்துவதில் பகிரங்கமாகவே பாரபட்சம் காட்டப்பட்டுள்ள இவ்விடயத்தில் இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சட்டத்தையும், நீதியையும் நேசிக்கின்ற இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*