கொழும்பில் 3,500 கோடி ரூபா செலவில் 400 அறைகளுடன் பாரிய சூதாட்ட விடுதி!

Parliament

350 மில்லியன் அமெரிக்க டொலர் (3,500 கோடி ரூபா) முதலீட்டில் 400 அறைகள் கொண்ட லாஸ் வெகாஸ் பாணியிலான பெரியதொரு சூதாட்ட விடுதியொன்று கொழும்பு, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் பிரபல சூதாட்ட முதலாளியான ஜேம்ஸ் பக்கர் என்பவரால் இந்த சூதாட்ட விடுதிக்கான முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்துக்கு 10 வருட வரிச் சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான சூதாட்ட நிலையங்களை நிறுவ வசதியளிக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கெனவே சூதாட்ட வர்த்தக கட்டுப்பாட்டு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், மேற்படி சூதாட்ட விடுதி தொடர்பான பிரச்சினையை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.

மேற்படி முதலீட்டுக்கு 10 வருடங்கள் வரை கம்பனி வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் இந்த திட்டம் தொடர்பான சகல இறக்குமதிகளுக்கும் சுங்க வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த முதலீட்டினால் 2,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் வேறு பல நன்மைகளும் கிடைக்குமெனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவரதன தெரிவித்தார்.

நட்சத்திர தரத்தில் 400 அறைகள் இங்கு நிர்மாணிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இங்கு கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு விடுதிகள், மாநாட்டு வசதிகள் போன்றனவும் காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*