மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்து பாரிய விபத்து; பாலமுனை செய்னுலாப்தீன் ஆசிரியர் உட்பட ஐவர் பலி! (Update)

IMGP0003-600-1

பதுளை, நமுணுகுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன் 87 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பலியானவர்களுள் பாலமுனை முதலாம் பிரிவைச் சேர்ந்த ஐ.எல்.எம்.செய்னுலாப்தீன் (27 வயது) (ஆசிரியர்) என்பவரும் அடங்குகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பஸ்ஸில் 91 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் காயமடைந்த 80 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சுற்றுலா சென்ற தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில்  கல்முனையை சேர்ந்த சகாப்தீன் (ஆசிரியர்), சுனில் சாந்த( சாரதி), பாரதிராஜா( நடத்துடனர்) ஆகியோர் உட்பட ஐவர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எல்.எம்.செய்னுலாப்தீன் ஆசிரியர்

நுவரெலியா சீதாஎலியவில் கடந்த 19ம் திகதி மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பசறை தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த பாலமுனை முதலாம் பிரிவைச் சேர்ந்த ஐ.எல்.எம். செய்னுலாப்தீன் (27 வயது) மரணமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் தனது பாடசாலை மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா சென்ற வேளையிலே இவ்வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இவரது மரணச் செய்தியால் பாலமுனைப் பிரதேசம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே, ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பட்டதாரி ஆசிரியராக மேற்படி பாடசாலையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை 03ல் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் மர்ஹும் ஐ.எல்.செய்னுலாப்தீன், மர்ஹும்களான இஸ்மாலெவ்வை- உதுமாநாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார்.

nuwara accdnt (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*