கிழக்கு மக்களை ஏமாற்றியது போன்றே வடமேல் மக்களையும் மு.கா ஏமாற்றப் போகிறது; பல்டி அடித்த யஹ்யா கூறுகிறார்!

Yahiya_Abtheenஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினரான எஹியா ஆப்தீன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளார்.

இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடமேல் மாகாண சபையில் வாக்களித்தமையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டார்.

பின்னர் இடம்பெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் பொது மன்னிப்பு கோரியதையடுத்து மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இவர் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் SLFP இல் இணைந்து கொண்ட இவர் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தான் போட்டியிடவுள்ளதாக எஹியா ஆப்தீன் தெரிவித்தார்.

“கடந்த 15 வருடங்களாக நான் மாகாண சபை உறுப்பினராக இருந்துள்ளேன். வட மேல் மாகாண சபையில் ஐந்தாக காணப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் தற்போது மூன்றாக மாறியுள்ளது. இதனை அதிகரிப்பது பற்றி சிந்திக்காது ஒரு பிரதிநிதித்துவத்தை மாத்திரம் பெறக்கூடிய வட மாகாண சபை தேர்தல் பற்றியே முஸ்லிம் காங்கிரஸ் தொடந்து சிந்திக்கின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்காத்தின் பங்காளி கட்சியாக இருந்து கொண்டு தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது சிறந்ததல்ல. இதன் காரணமாக நாங்கள் வடமேல் மாகாண சபையில் கடுமையாக புறக்கணிக்கப்பட்டோம்.

இந்த புறக்கணிப்பு தொடந்து இடம்பெறக் கூடாது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதன்போது அரசாங்கத்தை விமர்சித்து வாக்குகளை பெற்றது. பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. இதன் மூலம் குறித்த பிரதேச மக்களை கட்சி ஏமாற்றியுள்ளது.

இது போன்ற செயற்பாட்;டினையே வட மேல் மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்கு பின்னரே புத்தளத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொடந்து முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கொண்டு புத்தளம் மாவட்ட மக்களுக்கு எந்தவித சேவைகளையும் வழங்க முடியாது. இதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன்” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*