ஜனாதிபதியே எம்மைக் காப்பாற்றுங்கள்; முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள்!

Athaullah-Mr.-A-H-M-Fowzie--Hakeem-Rishard-badurdeen

மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்; முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுங்கள்! 

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது வணக்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் கொழும்பு -14 கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது முன்னேற்பாடான வகையிலும் நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தெட்டத் தெளிவானதும் வெளிப்படையானதுமான எமது பலத்த கண்டனத்தை வெளிப்படுத்த விளைகின்றோம்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மிக்க முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் பள்ளிவாசலொன்றின் புனிதம் மிக்க புகலிடத்தில் அமைதியான முறையில் தொழுவதற்கென ஒன்று கூடியிருந்த அடியார்கள் கூட்டமொன்றை மனக்கிலேசம் அடையச் செய்யும் வகையில் மிருகத்தனமாகவும் கோழைத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துயர் மிகு வன்முறைச் செயற்பாடு குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை உடனடியாக நடாத்துமாறு நாம் அரச தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தச் சம்பவமானது நாட்டில் கடந்த பல மாதங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களின் சமீப கால நிகழ்வாகவே நோக்கப்படுகின்றது. முன்னைய சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் பள்ளிவாசல்கள் மீது வேண்டுமென்றே நடாத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் குறித்து சட்டத்தை அமுல்படுத்துவோரால் எடுக்கப்பட்டிருந்த அரை மனதான (அக்கறையற்ற) பலனளிக்காத நடவடிக்கைகள் நீண்ட கால யுத்தமொன்றை அடுத்து தேசிய நல்லிணக்கத்தை இன்னும் அதிகளவில் தேடிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் குழப்பங்களை உருவாக்குவதென கங்கணங்கட்டிக் கொண்டுள்ளதாகக் காணப்படும் சில தீவிரவாதக் குழுக்களுக்கு தைரியமூட்டியுள்ளவையாகவே காணப்படுகின்றதெனலாம்.

தண்டனைப் பயமின்மை உணர்வுடன் செயற்படக்கூடிய சில சக்திகள் இருப்பதான எண்ணம் பொதுமக்கள் மனங்களில் வேரூன்றியுள்ள மாய எண்ணம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும்.

ஆகப்பிந்தியதாக பதிவாகியுள்ள இந்தச் சம்பவமானது பல மணி நேரத்தின் பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பிய கொழும்பு வடக்கும் மற்றும் கொழும்பு மத்தியில் உள்ள கிராண்ட்பாஸ் மாளிகாவத்தை மருதானை மற்றும் கெத்தாராமை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோத மனப்பான்மையை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறு நாம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை மற்றும் யுத்தத்தை முடிவு கட்டியமை ஆகியவை அனைத்துப் பிரஜைகளினதும் சமாதான சகவாழ்வுக்கு வழி கோல வேண்டுமே தவிர தனித்த ஒரு மக்கள் குழுவின் மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமொன்றாக அர்த்தப்படுத்தப்பட்டு விடக்கூடாது.

அரசின் அமைச்சர்கள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தங்களை விநயமாக வேண்டுகின்றோம்.

மதங்களுக்கிடையே இணக்க செயற்பாட்டை உறுதிப்படுத்த வல்ல நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் சார்ந்த பொறி முறையொன்றை உருவாக்குமாறு நாம் தங்களை வலியுறுத்துகின்றோம்.

பல்லின மற்றும் பல் மதங்களைக் கொண்டுள்ள இந்த நாட்டில் எமது மத சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான கடமையொன்றை அரசாங்கம் கொண்டுள்ளது. சிறுபான்மையின மதமொன்றின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதென்பது இன்னுமொரு மதத்தை மேம்படுத்தும் அல்லது பாதுகாக்கும் நடவடிக்கையாக எவ்வாறு அர்த்தப்படுத்த முடியுமென்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாட்டில் பரவி வரும் கும்பல் வன்முறை மற்றும் அளவுக்கு மீறி ஆர்வங்காட்டும் பித்துப்பிடித்துப் போயுள்ள செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருத்தான நடவடிக்கையை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் நாம் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் வணக்கத்திற்குரிய பெளத்த மத குருமார் ஆகியோரை வேண்டிக் கொள்கின்றோம்.

ஏ.எச்.எப்.பெளஸி- சிரேஷ்ட அமைச்சர்

ரவூப் ஹக்கீம்- நீதி அமைச்சர்

ரிசாத் பதியுதீன்- கைத்தொழில் வர்த்தக அமைச்சர்

ஏ.எல்.அதாவுல்லா- உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்

பஷீர் ஷேகுதாவூத்- உற்பத்திறன் ஊக்குவிப்பு அமைச்சர்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா- பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

பைசல் முஸ்தபா- முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர்

ஏ.ஆர்.எம்.ஏ.அப்துல் காதர்- சுற்றாடல், சக்திவள பிரதி அமைச்சர்

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. முஸ்லீம்கள் சார்பாக நீங்கள் எத்தனை அமைச்சர்கள் போனீர்கள் இப்படியான மகஜர்களும் கொடுத்தீர்கள்….ஆனால் அவர்கள் சார்பாக ஒரேயொரு பாட்டலி வந்தான் இனவாதிகள் முன்வைத்து போராடிய அத்தனை கோரிக்கைகளையும் அப்படியே பெற்றுக் கொடுத்தான். ஆகக் கூறைந்தது பழைய பள்ளிவாசலை திருத்தும் வரை புதிய பள்ளியில் தொழும் அனுமதியை கூட உங்களால் பெற்றுக் கொடுக்க முடிந்த்தா…? கையாலாகாத, கோழைகளாக திரும்பி வந்தீர்கள்
    இந்த ஆவணத்தை பாதுகாப்பாக எடுத்து வையுங்கள் அடுத்த தேர்தல் வந்தால் மறுபிரசுரம் செய்து தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தலாம்.

  2. unkaludaya letter sella kaasu. kidaitha udaneya kuppayil poddirupparkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*