தங்கச் சங்கிலியை அபகரித்த ராணுவ வீரருக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

-ந.குகதர்சன்-

மட்டக்களப்பில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இராணுவ வீரர் உட்பட இருவரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்பிற்காக விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் சியான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிய பவானி மயில்வாகனம் என்பவரது 2 பவுண் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்ற போது கீழே இறங்கிப் பறித்தவரது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக வீழ்ந்துள்ளது.

இதனைக் கைப்பற்றிய மாலையைப் பறி கொடுத்தவர் மட்டக்களப்பு பொலிஸில் பாரப்படுத்தியதை அடுத்து மட்டக்களப்பு பொலிஸார் கையடக்கத் தொலைபேசியில் உள்ள வீட்டு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மோட்டார் பைசிக்கிள் தொடர்பான விபரத்தைப் பெற்று அம்பாறை மற்றும் பொலனறுவை வரைக்குமான பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்;து வெலிக்கந்தைப் பொலிஸார் வெலிக்கந்தையில் வைத்து குறித்த மோட்டார் பைசிக்கிளில் சென்ற இருவரையும் கைது செய்து மட்டக்களப்புப் பொலிஸில் ஒப்படைத்திருந்தனர்.

மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது இருவரில் ஒருவர் இராணுவ வீரர் எனத் தெரியவந்துள்ளது. பட்டபற்திகே சுமித் சமர (25வயது – இராணுவ வீரர்)  கத்தரஸ்கொட்டுவ, கல்லோயாச் சந்தி, திருகோணமலை,  கே.ரி.வி.சுமித்குமார (27வயது)  கத்தரஸ்கொட்டுவ, கல்லோயாச்சந்தி,திருகோணமலை என்பவர்களே கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் காத்தான்குடியில் ஐந்தரைப் பவுண் சங்கிலியை பறித்து வந்த நிலையிலேயே மட்டக்களப்பில் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டு சங்கிலியினையும் மீட்ட மட்டக்களப்புப் பொலிஸாருக்கு 48 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மத்திய பிரிவு பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியந்த லியனகே உத்தரவிட்டதற்கமைய மேற்கொண்ட விசாரணையின் மூலம் பல கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், பல கொள்ளைகள் தொடர்பான பொருட்களையும் மீட்டுள்ளனர்.

இதன்போது ஏற்கனவே மீட்ட இரண்டு சங்கிலிகளுடன் மேலும் ஒரு சங்கிலியினை மீட்டதுடன் 6 சங்கிலிகளை வங்கியில் அடகு வைத்ததற்கான பற்றிச் சீட்டுக்களையும் மீட்டுள்ளனர்.

இவ் தங்கச் சங்கிலிகளை கபரன, இங்குறாகொட, தம்புல்ல போன்ற இடங்களில் உள்ள வங்கிகளிலேயே அடகு வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இப்பொருட்களை நீதிமன்றின் அனுமதி பெற்று வங்கியில் இருந்து மீட்டகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

48 மணித்தியால விசாரணை முடிந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை முன்தினம் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி சியான் முன்னிலையில் ஆஐர்படுத்திய போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்பிற்காக விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*