தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தினம்!

nov1948

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனனத் தின நிகழ்வுகள் யாழ். குருநகர் பகுதியிலுள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகில் இடம்பெற்றன.

இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியிலுள்ள அல்வாய் பகுதியில் 1901ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கணபதி காங்கேசர் பொன்னம்பலம் பிறந்தார்.

யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு புனித ஜோசப் கல்லூரியிலும் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்ந்திருந்தார்.

வழக்கறிஞராக தனது தொழில்வாழ்க்கையை ஆரம்பித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், 1948 ஆம் ஆண்டு அரச வழக்கறிஞராக தகுதிப் பெற்றிருந்தார்.

1931ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், போட்டியிட்ட முதலாவது தேர்தலில் வெற்றி பெறவில்லை.

பின்னர் 1934 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம்,அரசாங்க உறுப்பினர் என்ற தகுதியை தனதாக்கிக் கொண்டார்.

1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தமிழர் நலன்களை பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை அவர் ஆரம்பித்தார்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அன்னார் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய அன்னார் 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இறையடி எய்தினார்.

@சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*