கிருமி நாசினிப் பாவனையால் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

images

ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கிருமி நாசினிப் பாவனை எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தேவையற்ற கிருமிநாசினிப் பாவனை காரணமாகவே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இக்கிருமி நாசினி பாவனையே காரணம். அதனால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் முழு நாட்டிலும் சிறுநீரக நோய்க்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நாட்டில் சிறுநீரக நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிதி அமைச்சு, நீர்வழங்கல், வடிகாலமைப்பு ஆகிய அமைச்சுகளின் அதிகாரிகள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள், துறைசார் புத்திஜீவிகள் ஆகியோர் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இதேவேளை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுக்கு இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு இக்கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது என்று டொக்டர் அனுருத்த பாதெனிய கூறினார்.

அதேநேரம் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளபடி கிருமி நாசினிப் பாவனையால் அதிகரித்துவரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆரம்ப கொள்கை வரைவைச் சுகாதார அமைச்சின் ஊடாக தயாரிப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களில் 15 வீதமானோர் சிறுநீரக நோயாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடெங்கிலும் சுமார் 25,000 சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் நாளொன்றுக்கு 13 பேர் உயிரிழப்பதாகத் தெரிய வருவதாகவும் டொக்டர் பாதெனிய மேலும் குறிப்பிட்டார். @Tkn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*