நாவிதன்வெளி பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம்!

Jameel (4)

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு மத்திய முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கட்சியினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டதன் காரணமாகவே குறித்த உறுப்பினரை இடை நிறுத்தம் செய்ய நேர்ந்துள்ளதாக தலைவர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்குரிய வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அந்த சபையில் மு.கா. சார்பில் அங்கம் வகிக்கின்ற ஒரேயொரு உறுப்பினரான தஜாப்டீனுக்கு கட்சியின் தலைமைத்துவம் பணிப்புரை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் “என் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி நான் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பேன்” என்று மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் சபையில் உரையாற்றும்போது உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இவ்வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையும் மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் எதிர்த்து வாக்களித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்று இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்குரிய வரவு-செலவுத் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் விவாதங்களும் இடம்பெற்றன.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள பிரதி தவிசாளர் ஏ.ஆனந்தன் வெளியேறினால் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பிற்கு விட முடியும் என தவிசாளர் தெரிவித்தார்.

ஆனால் அவர் வெளியேற மறுத்ததையடுத்து தவிசாளர் கூட்டத்தை கால வரையறையின்றி ஒத்திவைத்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ஆனந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை நாவிதன்வெளி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டமை குறித்து கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களிடம் மெட்ரோ மிரர் செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்டபோது; தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

கட்சிக் கட்டுப்பாட்டை அவர் மீறியுள்ளதாலேயே தலைமைத்துவம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் ஜெமீல் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாமல் நாளை மறுதினம் இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்படவுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களிக்கா விட்டால் அவரை கட்சியில் இருந்து முற்றாக நீக்குவதற்கு தலைமைத்துவம் தீர்மானித்திருப்பதாக ஜெமீல் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*