10 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்; 5000 பேர் பாதிப்பு; 10 பேர் மரணம்!

main

10 மாவட்டங்களில் மீண்டும் டெங்குநோய் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக் கிடையிலான குழு நேற்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயதிலக தலைமையில் கூடியபோதே இத்தகவல் வெளியிடப்பட்டது.

இந்த பத்து மாவட்டங்களிலும் சுமார் 30 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து மீள்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் 5,000ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இருப்பதாகத் தரவுகள் தெரிவித்துள்ளன. 10 பேர் மரணமாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் டெங்குப் பாதிப்பு 25 வீதமாக அதிகரித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணவிகிதம் 0.2 வீதத்தினால் குறைந்துள்ளது. எனினும், கொழும்பு நகரை அண்டியுள்ள பகுதியில் அதிகளவு டெங்குநோயாளர்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் மாத்திரம் 600 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. இதேபோன்று, மொரட்டுவை, தெஹிவளை, கல்கிஸ்சை, பிலியந்தலை, கொலன்னாவ, கடுவலை ஆகிய பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்குநோய் அபாயம் உள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்குநோய் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சுகளுக்கிடையிலான குழு உடனடியாக டெங்கு ஒழிப்புகளுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அக்குழுவின் தலைவர் டொக்டர் நிஹல் ஜெயத்திலக பணிப்புரை வழங்கினார்.

இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 16ம் திகதி வரை தேசிய சுகாதார வாரத்தினுள் 11ஆம் திகதி டெங்கு ஒழிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இன்றையதினம் சகல இடங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*