இலங்கையில் மனிதப்படுகொலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன!

DSC_0300

இலங்கையில் மனிதப்படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மரண பரிசோதனை செயல்முறை பற்றிய தொலைக்கல்வி டிப்ளோமா பாடநெறி தொடர்பான செயலமர்வு நீதியமைச்சில் நடைபெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

சிங்கள மன்னர் காலத்திலிருந்து ‘சாக்கி பந்தா’ என்றழைக்கப்பட்ட அதிகாரி திடீர் மரணங்களை பற்றி விசாரித்து, அவை பற்றிய முடிவுகளை மேற்கொண்டு வந்துள்ளதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

இவ்வாறான சாக்கி பந்தா மரண விசாரணை முறைமை 1469 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே குற்றவியல் சட்டத்தில் காலத்துக்கு காலம் சில மூலாதாரங்களும், நியதிகளும் உட்புகுத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வந்துள்ளது. போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மரண விசாரணை முறைமை இருந்தது.

இலங்கையைப் பொறுத்தவரை விரல் அடையாளம் (கைரேகை) பரிசோதனை நூறாண்டு காலமாக குற்றப்புலனாய்வுக்கு பெரிதும் உதவி வந்தது. அத்துடன் தற்பொழுது மரபணு பரிசோதனை குற்றவியல் துறையில் சரிவர அடையாளம் காண்பதற்கு பயன்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் மனிதப்படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் பற்றிய விபரணங்கள் தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் மனப்பதிவை ஏற்படுத்திவிடுகிறது.

திடீர் மரணங்கள் சம்பவிக்கும் போது அவை பற்றிய விசாரணைகளை சரிவர மேற்கொண்டு சரியான தீர்மானத்திற்கு மரண விசாரணை அதிகாரிகள்  வருவதற்கு அவர்களுக்கு போதிய அறிவும், பயிற்சியும் அவசியமாகும்.

இதனை நோக்கமாகக் கொண்டே திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு கொழும்பு மருத்துவ பீடத்தில் தொலைக்கல்வி சட்ட மருத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட மருத்துவ பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

மரண விசாரணைகள் தொடர்பில் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளேன் என்றார்.

இந்த செயலமர்வில் சட்ட மருத்துவ பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ, , நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி  சில்வா ,மேலதிக சொலிஸிடர் ஜெனரல் யசந்த கோதாகொட, சட்ட மருத்துவ அதிகாரி குமார் சேனாநாயக்க, கொழும்பு நகர பிரதான மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி, முன்னாள் கொழும்பு பிரதான மரண விசாரணை அதிகாரி எட்வேர்ட் அஹங்கம ஆகியோரும் உரையாற்றினர்.

DSC_0319

 

DSC_0341

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*