அமைச்சர் ஹக்கீம் மலேசியா விஜயம்; சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க ஏற்பாடு!

Hakeem (6)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை மலேசியா சென்றடைந்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அந் நாட்டுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று திங்கள்கிழமை (28) மலேசிய, இலங்கை சம்மேளன அமைப்பினர் வழங்கிய பகற்போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர், மலேசிய சட்ட மா அதிபர் டான் ஸ்ரீ அப்துல் கனி உடனான சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் ஈடுபட்டார்.

மாலையில் மலேசிய பிரதம நீதியரசர் தாத்தோ துன் ஆரிபில் பின் சகரியாவை அமைச்சர் ஹக்கீம் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.

செவ்வாய்க்கிழமை மலேசியப் பாராளுமன்றத்தில் சபாநாயகர் டான் ஸ்ரீ டாடுக் செரி பங்கிலிமா பண்டிகார் அமின் ஹாஜி முலையாவைச் சந்திக்கவுள்ள இலங்கையின் நீதியமைச்சர், பிரதமரின் அலுவலக சட்ட விவகார அமைச்சர் வை.புவான் ஹாஜா நன்சி இன்டி ஹாஜி ஷூக்ரி யையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மலேசிய தேசிய வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவரையும், நிறைவேற்றுக் குழு உறுப்பினரையும் சந்திக்கவுள்ள அமைச்சர், மலேசிய -இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் தாத்தோ ஸ்ரீ செய்யத் இப்ராஹிம் பின் காதிர், அந் நாட்டு நீதியமைச்சர் தாத்தோ ஸ்ரீ செய்யத் இப்ராஹிம் உடன் கலந்துரையாடுவதோடு அவர் அளிக்கும் விருந்துபசாரத்திலும் பங்குபற்றுவார்.

கோலாலம்பூர் சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் தலைவரையும், மலேசிய வர்த்தகர் சமூகத்தினரையும் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பார்.

புதன்கிழமை (30) உம்னோ என்றழைக்கப்படும் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் செயலாளர் நாயகம் தாத்தோ தெங்கு அத்னான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான பரஸ்பர கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது.

நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் அமைச்சருடன் அங்கு சென்றுள்ளார்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*