தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து உரிமை பற்றி பேசுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!

-குகதர்சன்-

நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது நிச்சயம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஓட்டமாவடி மூன்றாம் வட்டார ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டமும் இப்தார் நிகழ்வும் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் அதிக ஆசனங்களைப் பெறுவோம் என்று அறிக்கைகளை விட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அதிகப்படியான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அளித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வைப்பார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

எமது பிரதேசத்தில் தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து உரிமை பற்றியும் சுதந்திரம் பற்றியும் பேசிவிட்டு காணாமல் போய் அடுத்த தேர்தலுக்கு வந்து வாக்கு கேட்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கான சந்தர்ப்பம்தான் இம்மாகாணசபைத் தேர்தல்.

கிழக்கு மாகாணத்தில் அமைதியை ஏற்படுத்தி கிராமங்கள் தோரும் பாரியளவில் அபிவிருத்தியைச் செய்து மாகாணத்தில் உள்ள மக்களை நிம்மதி பெறச் செய்த அரசாங்கம் என்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கு இடமில்லை’ என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*