கல்முனை மாநகர சபை சாரதி ஐம்பதாயிரம்ரூபா பிணையில் விடுதலை; உழவு இயந்திரம் தொடர்ந்து தடுத்து வைப்பு!

-அஸ்லம் எஸ்.மௌலானா- 

சட்ட விரோதமாக கடல் மண் ஏற்றிச் சென்ற கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தின் சாரதி ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த உழவு இயந்திரம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி வழியாக கடல் மண்னை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான RC-9080 இலக்கமுடைய உழவு இயந்திரம் அம்பாறை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரி எம்.சி.எம்.ஜெசூர் தலைமையில் மடக்கிப் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதே சாரதியை ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உழவு இயந்திரத்தை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார். இது குறித்து கல்முனை மாநகர சபை ஆணையாளர் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவித்த நீதவான் குறித்த தினத்தன்று கல்முனை மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி: www.metromirror.lk 2012/07/27 Friday

சட்ட விரோதமாக மண் ஏற்றிச் சென்ற கல்முனை மாநகர சபை உழவு இயந்திரம் ஊழியர்களுடன் மடக்கிப் பிடிப்பு!

சட்ட விரோதமாக கடல் மண் ஏற்றிச் சென்ற கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரமொன்ருடன் மாகர சபை ஊழியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் வைத்தே இந்த உழவு இயந்திரம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரி எம்.சி.எம்.ஜெசூர் தலைமையிலேயே இந்த மண் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி வழியாக கடல் மண்னை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான RC-9080 இலக்கமுடைய உழவு இயந்திரமே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்போது சாரதி உட்பட மேலும் நான்கு மாநகர சபை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உழவு இயந்திரம் மற்றும் ஊழியர்கள் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் என்றும் மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரி எம்.சி.எம்.ஜெசூர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை உழவு இயந்திரங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு சட்ட விரோதமாக கடல் மண்ணை அகழ்ந்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அது குறித்து மாநகர சபையின் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்திருந்ததாகவும் மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரி எம்.சி.எம்.ஜெசூர் தெரிவித்தார்.

எமது அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்யப்பட்டு வந்ததன் பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மாநகர சபை உழவு இயந்திரத்தை அதன் சாரதி மற்றும் ஊழியர்களுடன் கைப்பற்றியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2011ஆம் ஆண்டு 49ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சட்ட விரோதமாக மண் அகழ்வது, அதனைக் கொண்டு செல்வது, களஞ்சியப்படுத்தி வைப்பது போன்ற சம்பவங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதோடு குறித்த நபர்கள் குறைந்தது 14 நாட்கள் சிறை வைக்கப்படுவதோடு அவர்கள் மீது அபராதமும் வித்திக்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*