மயோன் முஸ்தபா போன்றோருக்கு செய்த துரோகத்தின் தண்டனையை ஐ.தே.க. அனுபவிக்கிறது!

-இப்னு ஷெரீப்-

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தாரைவார்த்து மயோன் முஸ்தபா போன்றோருக்கு செய்த துரோகத்தனத்தின் தண்டனையை இப்போது ஐக்கிய தேசியக் கட்சி நன்றாகவே அனுபவித்து வருகின்றது என அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தெதாடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

அன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை சரணாகதியடையச் செய்து அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களை போட்டித் தவிர்ப்புக்கு உட்படுத்தியிருந்தது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்.

இதன் பின்விளைவு ஐக்கிய தேசியக் கட்சியின் நிரந்தர வாக்கு வங்கி திசை திருப்பப்பட்டதுடன் யானை தனது தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டது போல இன்று தனியாக நின்று உயிரோட்டமான அரசியலைச் செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்தடம் போட்டுக் கொண்டிருந்த மயோன் முஸ்தபா போன்ற பிரசித்த அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றியோ, கட்சியை நம்பியிருந்த தனது வாக்காளர்களைப் பற்றியோ ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை சற்றும் கவனம் செலுத்தாமல் முழுமையாக முஸ்லிம் காங்கிரஸின் கால்களில் வீழ்ந்து கிடந்தது. இதன் பிரதிபலனை தற்போது ஐக்கிய தேசியக் கட்சி நன்றாக அனுபவித்து வருவதுடன் அதற்கான பிராயச்சித்தங்களையும் தேடிக்கொண்டிருக்கிறது.

தயா கமகே போன்ற தனவந்தர் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்காது விட்டிருந்தால் எஞ்சியிருந்த அதன் ஆதரவாளர்களைக் கூட அக்கட்சி தேடிக் கண்டுபிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பொறுப்பு வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளை செய்வதில் இன்னும் திருப்தியடையாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்து வருகின்றது.

அரசாங்கத்துடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கோபித்துக் கொண்டு வந்து தமக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை மட்டும் நம்பிக்கொண்டு ஒரு தேசிய அரசியற் கட்சி தேர்தலுக்கு முகங்கொடுப்பது வேடிக்கையான விடயமாகும்.

ஓட்டப் பந்தயத்தில் குதித்துள்ள ஏனைய போட்டியாளர்களின் கால்களைக் கட்டி வைத்துவிட்டு தான் மட்டும் ஓடி வெற்றி பெற்றுப் பழகிய தந்திரோபாயத்தைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் வலையில் வீழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்னும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரச தரப்பில் தேசிய காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இல்லாதிருந்திருந்தால் இதே தந்திரோபாயத்தையே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலிலும் காட்டியிருக்கும். கடைசிக் கட்டத்தில் அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டதன் விளைவால் முஸ்லிம் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.

அன்று முஸ்லிம் காங்கிரஸின் மந்திரத்தில் கட்டுண்டுபோன ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் எழுப்பி விட யாருமற்ற நிலையில் இப்பொழுதுதான் முஸ்லிம் காங்கிரஸின் சுயரூபத்தை அடையாளம் கண்டிருக்கிறது. இனி மீளெழுவதற்கு அதற்கு புதிதரக இரத்தம் பாய்ச்ச வேண்டியுள்ளதுடன் இந்த துரோகத் தனத்தையெல்லாம் புரிந்து கொண்டு ஆகுமானதைச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப்பீடம் முன்வர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*