ஆப்கானிஸ்தானில் கூட்டு அரசாங்கம்; புதிய ஜனாதிபதியாக அஷ்ரஃப் கனி பதவியேற்பு!

C29DAFGA

ஆப்கானிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக அஷ்ரஃப் கனி நேற்று திங்கள்கிழமை மாலை பதவியேற்றார்.

பிரதமர் பதவிக்கு இணையான தலைமைச் செயல் அதிகாரியாக அப்துல்லா அப்துல்லா பொறுப்பேற்றார். மேலும், 2 துணை ஜனாதிபதிகளும் பதவியேற்றனர்.

தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் அந்நாட்டின் தலைமை நீதிபதி அப்துல் சலாம் ஆஸிமி, அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அஷ்ரஃப் கனி கூறுகையில், “உங்களையெல்லாம் விட நான் சிறந்தவன் என்று கூறிக் கொள்ள முடியாது. நான் நல்லது செய்தால், எனக்கு ஆதரவாக இருங்கள். தவறு செய்தால், என்னைச் சரியான பாதைக்குத் திருப்புங்கள்’ என்றார்.

தீவிரவாதிகள் தங்களது செயல்பாடுகளைக் கைவிட்டு, அரசுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இவர் ஆப்கானிஸ்தானின் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். முன்னதாக, உலக வங்கியில் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா கூறுகையில், “ஆப்கன் தேர்தலை முடக்குவதற்குப் பல்வேறு முயற்சிகளில் தலிபான்கள் ஈடுபட்டனர். எனினும் அவற்றையெல்லாம் கடந்து வாக்களித்த ஆப்கன் மக்களுக்கு நன்றி.

ஒற்றுமையான அரசை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட உள்ளது’ என்றார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்டு, ஜனநாயக முறையில் ஹமீது கர்ஸாய் ஆப்கானிஸ்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக முக்கிய வேட்பாளர்களான அஷ்ரஃப் கனி, அப்துல்லா அப்துல்லா ஆகிய இருவருமே பரஸ்பரம் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், ஐ.நா. முன்னிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக இருவரும் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இதன்படி அஷ்ரஃப் கனி அதிபராவது என முடிவானது. பிரதமர் பதவிக்கு இணையான தலைமைச் செயல் அதிகாரியாக அப்துல்லா அப்துல்லா பொறுப்பேற்க உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்நிலையில், மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அஷ்ரஃப் கனி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆப்கனில் புதிய அதிபர் பதவியேற்றுள்ள அதேவேளையில், காபூல் விமான நிலையம் அருகே தலிபான் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

தனது உடலில் வெடிகுண்டுகளைப் பொருத்தி வந்த நபர், அவற்றை வெடிக்கச் செய்தார். நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர். தலிபான் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*