கோரிக்கைகள் குறித்துக் கலந்துரையாட சென்ற ரிஷாட், மின்சாரம் தாக்கியதுபோல் மைத்திரிக்கு ஆதரவு என அறிவித்தார்!

Rizadrஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறிச் சென்று, பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்ததன் மூலம் முன்னாள் ரிஷாட் பதியுதீன் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றியிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலை வர் சட்டத்தரணி என்.எம்.சஹீட் தெரி வித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவேண்டிய எந்தவொரு தேவையும் இல்லையெனக் குறிப்பிட்ட அவர், மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் சமூகத்துக்காக எதனையும் செய்யவில்லை யென்றும் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட் மற்றும் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் நேற்று அறிவித்தனர்.

இவர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவும் கலந்துகொண்டிருந்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசை நான் உருவாக்கினேன். அதன் சார்பில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட ரிசாட் பதியுதீன் வெற்றிபெற்றதும் கட்சியின் தலைமைப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தேன்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்றுமுன்தினம் வெள்ளவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இதில் உறுப்பினர்களுக்குக் கருத்துக்களைக் கூற அனுமதி வழங்கப்பட்டது. எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில் மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து பொது எதிரணியினரைச் சந்தித்து எமது கோரிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவோம் என அமைச்சர் கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்த அனைவரும் உடன்பட்டதால் ரணில் சந்திரிக்கா உள்ளிட்டவர்களைச் சந்திக்கச் சென்றோம். அங்கு சென்றதும் மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது. ஏன் எனில் ஏற்கனவே திட்டமிட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரிஷாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன வுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.

அவர் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு கட்சியில் உள்ளவர்களை ஏமாற்றியுள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் நினைப்பதுபோல் செயற்பட அனுமதிக்க முடியாது.

மைத்திரிபால சிறிசேன பொலனறுவையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கோ எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. பொதுபலசேன பிரச்சினை ஏற்பட்டபோது மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை. இவ்வாறானதொரு நபருக்கு எவ்வாறு நாம் ஆதரவு வழங்குவது.

இந்த முடிவால் அதிருப்தியடைந்த எமது கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் எம்முடன் உள்ளனர். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எம்முடன் இருக்கிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாம் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்பட்டது என இங்கு கருத்துத் தெரிவித்த மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் கூறினார். இதில் உடன்பாடு இல்லையென்பதால் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*