நாட்டை பாதுகாக்கவே ஹக்கீமின் கோரிக்கையை நிராகரித்து அவரது வாக்குகளும் தேவை இல்லை என்றேன்!

Sri-Lankas-president-Mahi-006

“எந்த கம்பியூட்டர்’ ‘ஜில்மாட்டும் எமக்கு அவசியமில்லை. மக்கள் வாக்கு மூலம் நாம் அமோக வெற்றி பெறுவது உறுதி” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தோல்வியை உணர்ந்து கொண்டவர்களே பொய்ப்பிரசாரங்களிலும் குற்றஞ் சுமத்துவதிலும் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மீது எமக்கு நம்பிக்கையுண்டு. எதிர்வரும் ஒன்பதாம் திகதியும் தாமே ஜனாதிபதி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெரும் அர்ப்பணிப்புடன் வெற்றி கொண்ட நாட்டை மீள புலிகளுக்குத் தாரை வார்க்க முடியாது. அனைவரும் இணைந்து வெற்றி கொண்ட தாய்நாட்டை சுபீட்சத்தில் கட்டியெழுப்புவோம். வாக்குகள் அன்றி நாடே எமக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று தெபரவெவ நகரில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளித்ததுடன், இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாம் செல்லுமிடமெல்லாம் இலட்சக்கணக்கில் திரண்டு எமக்கு அமோக ஆதரவளித்து வருகின்றனர்.

அதேபோன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச மக்களும் திஸ்ஸ மஹாராமயில் திரண்டுள்ளனர். இந்த மாபெரும் விளையாட்டு மைதானமும் நிரம்பி சுற்றுப்புறமெல்லாம் மக்கள் கூட்டம். இந்த மைதானத்திற்கு பதிலாக நாம் புதிய விசாலமானதொரு மைதானத்தை நிர்மாணித்து வழங்கவே திட்டமிட்டுள் ளோம். இங்கு அல்லது வீரவிலவில் என்றாலும் நாம் அதை அமைப்போம். அதற்கான அனைத்து செலவையும் நாம் ஏற்போம்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு ள்ளன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் பற்றியும் பேசப்படுகிறது. இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிலர் எம்மீது குற்றஞ் சுமத்துகின்றனர்.

விமான நிலையத்தை இங்கு அமைத்ததற்கும் துறைமுகத்தை நிர்மாணித்ததற்கும் எம்மீது குற்றஞ் சாட்டுகின்றனர். இங்குள்ள வீதிகளை புனரமைத்து ‘காபட்’ போட்டதற்கும் குறை கூறுகின்றனர். அதிவேக நெடுஞ்சாலையை அம்பாந்தோட்டை வரை கொண்டு வரவுள்ளோம் அதற்கும் இவர்கள் ஏதாவது கூறுவர்.

எவ்வாறாயினும் நாம் ஹம்பாந்தோட்டை வரை அதிவேக நெடுஞ்சாலை மட்டுமன்றி ரயில் சேவையையும் தொடரவுள்ளோம். அப்போது இங்குள்ள மக்கள் அதன் முழுமையான பயன்களை அனுபவிக்க முடியும்.

நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழு ப்பும் போது இதுவரை கொழும்பும் அதனை அண்டிய பிரதேசங்களுமே சிலருக்குக் கண்ணில் பட்டது. எனினும் நாம் இப்பிரதேசங்களுக்குக் காட்டப்பட்ட சிற்றன்னை மனப்பான்மையை இல்லாதொழித்தோம்.

அது மட்டுமன்றி வடக்கு, கிழக்கையும் மீட்டு யாழ்ப்பாணத்தையும் ஏனைய பகுதிகளைப் போன்றே அபிவிருத்தி செய்துள்ளோம்.

எமது கட்சியிலிருந்து சிலர் வெளியேறிச் சென்றுள்ளனர். அவர்களை மீள நான் இணைத்துக் கொள்ளப்போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் என்னிடம் வந்து கிழக்கில் தனியான முஸ்லிம் அலகு ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரினார். நான் அதற்கு இணங்கவில்லை.

இது மிக அநீதியான ஒரு கோரிக்கை என்பதால் அப்படி தனி அலகொன்றை வழங்க முடியாது என கூறிவிட்டேன். என்னிடம் பெருமளவு வாக்குகள் உள்ளன என அவர் என்னிடம் தெரிவித்தார். நான் உடனே அவரிடம் “நீங்கள் உங்கள் வாக்கை வைத்துக் கொள்ளுங்கள்” நான் நாட்டை வைத்துக் கொள்வேன்” என்று கூறியனுப்பி விட்டேன்.

இத்தகையோரோடுதான் எதிரணியினர் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். வடக்கின் பிரபாகரனின் ஆதரவாளர்கள், மறுபக்கம் ரவூப் ஹக்கீமின் தரப்பினர் என இவர்கள் ஒன்றாக இணைந்து கொண்டு இப்போது பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் வருவதாகக் கூறுகின்றனர். சிலர் போவதாகக் கூறுகின்றனர்.

இன்று நான் வானொலி கேட்டபோது, சஜித் பிரேமதாச ஆற்றிய உரை அதில் ஒலிபரப்பானது. “இந்த நாட்டின் ஜனாதிபதியான எனது தந்தையை பிரபாகரன் படுகொலை செய்தார். அவ்வாறிருக்கையில் பிரபாகரனுக்கு ஆதரவு வழங்கியவர்களின் மேடையில் நான் போய் எவ்வாறு வெட்கமில்லாமல் அமர்வது? என்று கேள்வி எழுப்புகிறார்.

திரு. பிரபாகரன் என பிரபாகரனை வர்ணிப்பவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றோருடன் நான் எப்படி ஒன்றாக அமர்வது என்றும் அவர் தெரிவிக்கின்றார். சஜித் அவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் உள்ளதோ எமக்குத் தெரியாது. எனினும் நான் அவரது கூற்றைக் கேட்ட போது அவரும் இப்போது பெறுப்பான நிலையில் இருப்பதை என்னால் உணர முடிகிறது.

சில வேளைகளில் இன்று இந்த மேடையிலோ அல்லது எமது அடுத்த மேடையிலோ ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி எமது மேடையில் அவர் ஏறினாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

எனினும் அவருக்கு நான் கூறுவது அக்கட்சியிலேயே இருந்து கொண்டு வீழ்ச்சியடையும் ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்ப செயற்படுமாறே. எம்மோடு ஒன்றிணையா விட்டால் பரவாயில்லை, எமக்கு வாக்களித்தால் போதும் என்றும் நான் அவருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எட்டாம் திகதி கட்டுநாயக்கவை மூடி விடுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் மத்தளையிலும் விமான நிலையமொன்றை அமைத்திருப்பது அவர்களுக்கு மறந்து போய்விட்டது.

எனினும் பிரபாகரனால் கூட துரத்த முடியாத இந்த மஹிந்த ராஜபக்ஷவை மத்தளையில் மட்டுமன்றி கட்டுநாயக்க ஊடாகக் கூட நாட்டை விட்டு விட்டு ஓடிப்போவதில்லை. இங்குதான் நான் வாழ்வேன். ஓய்வூதியம் பெறுவதும் இங்குதான். என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இவர்கள் நன்றாகப் பயந்து விட்டனர் என்பது தெரிகிறது. பயத்திலேயே இவ்வாறு பேசுகின்றனர். அவர்கள் தோற்றுப்போவது அவர்களுக்கே தெரிந்து விட்டது. சிலவேளை இப்போது வாக்கெண்ணும் போது ‘ஜில்மாட்’ பற்றியும் பேசுவர். ‘கம்பியூட்டர் ஜில்மாட்’ என்பர். எமக்கு எந்த கம்பியூட்டர் ‘ஜில்மாட்’டும் அவசியமில்லை. மக்கள் சரியாக தமது வாக்கு என்னும் ‘ஜில்மாட்டைப் போடுவர் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

வெற்றிலைக்கு மக்கள் தமது வாக்குகளை அளிப்பது உறுதி. எமது படையினர் தமது உயிரைத் தியாகம் செய்து வெற்றி கொண்ட தாய் நாட்டை நாம் காட்டிக்கொடுக்க இடமளிக்கப்போவதில்லை.

மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்தோடு மீட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள நாட்டை மீள பிரபாகரனின் தரப்புக்கு தாரை வார்க்க முடியாது என்பதை உறுதியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

காப்புறுதிக் கூட்டத்தாபனம், டெலிகொம் போன்ற 90ற்கு மேற்பட்ட அரச நிறுவனங்களை விற்ற சந்திரிகா, ரணில் போன்றோர் இப்போது எம்மைப் பார்த்து ‘மெகாடீல்’ என விமர்சித்து வருகின்றனர். என்னிடம் அவர்களது பட்டியலே உள்ளது.

அர்சாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்களை விற்றது சந்திரிகாவே என்பதை மக்கள் உணர வேண்டும். நாம் மீள அந்த நிறுவனங்களைப் பொறுப்பேற்றதும் மக்களுக்குத் தெரியும்.

இவர்கள் ஒன்றை மக்களுக்குக் கூறி வேறொன்றைச் செய்பவர்கள். எனினும் தெற்கில் பிறந்த நாம் எம்மிடம் இரண்டு வார்த்தை கிடையாது.

நாம் சொல்வதை செய்பவர்கள். எம்மீது குற்றஞ்சுமத்துபவர்கள் இவ்வாறு தான் செயற்பட்டுள்ளார்கள். நாம் இந்த வருடத்தில் ஒன்றரை இலட்சம் இளைஞர் களுக்கு அரச துறை தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

எனினும் எதிரணியினர் அரச சேவையை பலவீனப்படுத்தவே நடவடிக்கை எடுக்கின்றனர். அது அவர்களால் முடியாது ஏனென்றால் எதிர்வரும் 9ம் திகதியும் நாமே இந்த நாட்டின் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

(ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*