கல்முனை அபிவிருத்தி அதிகார சபை; பிரதமர் ரணிலின் முன்மொழிவை அமுல்படுத்தக் கோரி மாநகர சபையில் பிரேரணை!

3

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகரின் துரித அபிவிருத்தி திட்டத்தை கருத்தில் கொண்டு தனியான அபிவிருத்தி அதிகார சபை ஏற்படுத்தப்படும் என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவு அமுல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒன்று நாளை வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்படவுள்ளது.

இப்பிரேரணையை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் சமர்ப்பிக்கவுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்;

“கடந்த 2014.12.27ஆம் திகதி கல்முனை நகரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தாம் ஆட்சிக்கு வந்தால் கல்முனை மாநகரை துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொண்டு வரும் பொருட்டு கல்முனையில் தனியான அபிவிருத்தி அதிகார சபை ஒன்று அமைத்துத் தரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.

கல்முனைத் தொகுதியில் பரந்துபட்ட அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்முனைப் பொதுச்சந்தைக்கு புதிய கட்டிட தொகுதி அமைக்கப்படும் என்றும, விளையாட்டு மைதானம் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கல்முனையை ஒரு புதிய நகரமாக மாற்றுவோம் என்றும் அதற்குத் தேவையான காணிகளை பெற்றுத் தருவோம் என்றும் அவர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் வாக்குறுதி வழங்கினார்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்முனைக்கு தனியான அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்துவேன் என்று குறிப்பிட்டு இருந்தது பற்றியும் பிரதம அமைச்சர் அவர்கள் அக்கூட்டத்தில் நினைவு கூரத்தார்.

அவரது இந்த அறிவிப்புக்காக தேர்தலுக்கு முன்னதாகவே எமது மாநகர சபையின் டிசம்பர் மாத அமர்வில் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து நல்லாசி வழங்கியிருந்தோம்.

நாட்டில் வளர்ச்சி; அடைந்துள்ள கொழும்பு, கண்டி மாநகரங்களைப் போன்று கல்முனை மாநகரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அபிலாசைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கல்முனையை துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக பாரிய திட்டம் ஒன்றை வகுத்திரந்தார் என்பதை இவிவிடத்தில் நினைவு கூறுகின்றேன்.

அந்த வகையில் பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி கல்முனையை துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் பொருட்டு கல்முனை அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைத்துத் தருமாறு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்-ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களை இப்பிரேரணை மூலம் எமது கல்முனை மாநகர சபை கோருகின்றது” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*