தலைவருக்கு எதிராக சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தனக்கு தொடர்பில்லை; ஜெமீல் அறிவிப்பு!

Jameel (4)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் நேரடியாக விவாதித்தேனே தவிர கட்சிக்கு வெளியே போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்நிலையில் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றமடைந்ததன் பிரதிபலிப்பாக தமது ஆதங்கத்தை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது தலைவரின் உருவப் படத்தை எரிக்க சிலர் முற்பட்டுள்ளனர். இந்த செயற்பாட்டை நான் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்.

சில தீய சக்திகள் எனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். எனது ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு இடம்பெற்றதாக சில ஊடகங்களும் தவறான செய்தி வெளியிட்டிருப்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எந்தவொரு பிரச்சினையின் போதும் நான் கட்சி மட்டத்திலும் தலைவருடனும் நேரடியாக கருத்துகளை பரிமாறுவதும் விவாதத்தில் ஈடுபடுவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்பதை கட்சியின் உயர் பீடத்தினரும் போராளிகளும் நன்கு அறிவார்கள்.

ஆனால் எனக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் கும்பல்கள் முதலமைச்சர் சர்ச்சையை பயன்படுத்தி என்னை கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் எதிரானவன் என்று சித்தரிக்கும் நோக்கில் மக்களுடன் மக்களாக நின்று தலைவரின் உருவப் படத்தை எரிப்பதற்கான சதியை அரங்கேற்றியுள்ளனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*