சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்க சுத்தமான நீர்; 100 நாள் திட்டத்தில் நிறைவேறும் என்கிறார் ஹக்கீம்!

UDA_4225

வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் இரசாயன பதார்த்தங்களின் கலப்பினால் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழி வகைகளையும் மேற்கொள்வதாகவும், அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (21) பதவிய பிரதேசத்திற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன் சென்று நிலைமையைப் பார்வையிட்ட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கு இதனைக் கூறினார்.

சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் ரி. பாரதிதாசன், இளைப்பாறிய மேலதிக பிரதிப் பொது முகாமையாளரும், நீர் சுத்தீகரிப்பில் நிபுணத்துவம் பெற்றவருமான டீ.என்.ஜெ. பேர்டிணன்டோ ஆகியோரும் அமைச்சரின் விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

நீரில் கலந்துள்ள இரசாயன பாதார்த்தங்களை வேறாக்கி, நீரை சுத்தீகரிப்பதற்கு உதவும் ஆர்ஓ என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயந்திரத்தையும், அதன் பொறிமுறையையும் பதவிய நகருக்கு அருகிலுள்ள பராக்கிரமபுர என்ற கிராமத்துக்குச் சென்று அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார். அங்கு 700 குடும்பங்களுக்கு நாள் தோறும் தலா 40 லீற்றர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான பொறிமுறையை சிறுநீரக நோய் அதிகம் காணப்படும் ஏனைய சில மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன.

குழாய் நீர் கிணறுகளின் உபயோகம், மழை நீரை தேக்கி வைத்து வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*