மக்களின் எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள் பறைசாற்றும்!

my3-ஏ.எல்.நிப்றாஸ்-

கேர்ணல் கடாபியைப் போலவோ சதாம் ஹூசைனைப் போலவோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படவில்லை. இரத்தம் சிந்தியோ சதிப்புரட்சி மூலமோ இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

தன்னை எதிர்த்து போட்டியிட்டதற்காக முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா தண்டிக்கப்பட்டதைப் போல மஹிந்த ராஜபக்ஷ வஞ்சம் தீர்க்கப்படவும் இல்லை.

நல்லாட்சியின் ஆரம்பம் எப்படியிருக்கும்; என்பதை ‘கள்ள ஆட்சிக்கு’ துதிபாடியவர்கள் விளங்கிக் கொள்ள இதுவே போதுமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது கொல்லைப்புறத்தில் போஷித்து வளர்த்த இனவாதம், வீட்டுக்குள் குடிகொண்டிருந்த குடும்ப ஆட்சி என்பவற்றுக்கு மேலதிகமாக அவரே உருவாக்கிய 18ஆவது அரசியலமைப்பு திருத்தமே அவரது  ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது என்பதை உலகறியும்.

18ஆவது திருத்தத்தை மேற்கொள்ளாது இருந்திருந்தால் இன்னும் 2 வருடங்கள் பதவி வகித்திருப்பார் அல்லது தோற்கடிக்கப்படாமல் கௌரவமாக வீடு சென்றிருப்பார்.

ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ஆட்சிக் காலம் மீதமிருக்கும் போதே மக்களால் தோற்கடிக்கபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதி இவர் என்பதை வரலாறு எழுதி வைத்திருக்கின்றது.

ஒருநாள் முதல்வன்

மக்களுக்கு இப்போது ஆட்சியாளர்கள் பற்றிய பயமும் இருப்பு பற்றிய நிச்சயமின்மையும் கொஞ்சமாக குறைந்திருக்கின்றது. சினிமாப் படத்தில் வரும் ‘ஒருநாள் முதல்வன்’ போல 100 நாள் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றது.

மைத்திரிபால அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மாறுபட்டதாக களநிலைமைகள் நாளுக்குநாள் மாறிக் கொண்டிருக்கின்றன.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருப்போரும், சவப்பெட்டி விபாபாரிகள் போல இழவுச் செய்தியை எதிர்பார்த்திருப்போரும் நமது அரசியலில் நிறைந்திருக்கின்றார்கள்.

இந்த வகுதிக்குள் வராதவர்கள் ஊர் ரெண்டுபட வேண்டும் என்று அவாவுற்றிருக்கும் தரப்பினராக இருக்கின்றார்கள். இதுதான் நிகழ்காலத்தில் கரிசனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான போக்கு பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் வெகுவாக சிலாகித்துப் பேசுகின்றன.

ஜனாதிபதியின் பதவியேற்புக்கு 6 ஆயிரம் ரூபாவே செலவு, அவர் ரெனோல்ட் பேனா பயன்படுத்துகின்றார், சாதாரண செருப்பையே அணிகின்றார், தனது மனைவி சமைத்த உணவையே சாப்பிடுகின்றார், மகன் செய்த தவறை கண்டித்திருக்கின்றார், விமான நிலையத்தில் ஒரு சாதாரண பிரஜைபோல நடந்து கொள்கின்றார், ஜனாதிபதிக்கான செலவை பாரியளவுக்கு குறைத்திருக்கின்றார்…. ஏன ஜனாதிபதியின் ஆடம்பரமற்ற வாழ்க்கை பற்றி ஒவ்வொரு நாளும் கிடைக்கப்பெறும் செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சி தருவனவாக இருக்கின்றன. இத்தனைநாளும் எப்பேற்பட்ட ஒரு ஆட்சியின் கீழ் வாழந்திருக்;கின்றோம் என்று எண்ணும் சுரணையுள்ளவர்களுக்கு உடம்பு கூசுகின்றது.

இவ்வாறான வீண்விரயமற்ற, பகட்டில்லாத, ஆடம்பரமற்ற ஒரு ஆட்சியாளரும் சட்டத்தின் ஆளுகை மற்றும் இனங்களுக்கு இடையிலான சௌஜன்யம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும்  ஒரு ஆட்சிச் சூழலும் நல்லாட்சியின் அடிப்படை இலட்சணங்களே என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

ஆனால் ஒரு பூரணத்துவமான நல்லாட்சி என்பது இதனுடன் முடிவடையவில்லை. நல்லாட்சிக்கான ஒரு ஆரம்பமே இது என்பதை மிகப் பொறுப்புணர்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை வழங்கிய மக்கள் அவரது ஆட்சியில் சில விடயங்களை எதிர்பார்த்திருந்தார்கள். ஊழல், மோசடி, குடும்ப ஆட்சி, இனவாதம் என்பவற்றை களைந்து நேர்மையான ஒரு ஆட்சிச் சூழலை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பு அவர்களிடமிருந்தது. அதற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவை குறைத்தல், வருமானத்தை உயர்த்துதல், அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குதல், அடிப்படை மனித உரிமையை பேணுதல், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல் என வரையறுக்கப்படாத நீண்டகால எதிர்பார்ப்புக்களும் மக்களிடம் இருந்ததை மறுக்கவியலாது.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமைகள், அரசியல் கட்சிகளின் நகர்வுகள் என்பனவற்றின் காரணமாக எடுத்த எடுப்பில் அரசின் திட்டங்களை எல்லாம் சொன்னபடி நடைமுறைப்படுத்துவதற்கு சவாலை தோற்றுவித்திருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையேயான கருத்து வேறுபாடு, சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடுகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சதித்திட்டங்கள், ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மைப்படுத்துவதா சுதந்திரக் கட்சிக்கு சார்பாக நிற்பதா என்ற மைத்திரிபாலவின் தர்மசங்கடம், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான காலவரையறை, தேர்தல் முறைமை மாற்றம் பற்றிய அவசியம் என ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு மைத்திரிபாலவின் நிர்வாகம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்தே பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார். 100 நாள் முடிவடைந்த உடனேயே பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு பாராளுமன்ற அதிகாரத்துடனான ஆட்சி முறைi உருவாக்கப்படும் என்று மக்களுக்கு பொது எதிரணி வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சாத்தியம் தொடர்பான சிக்கல்கள், காலதாமதம் ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் 100 நாட்களுக்குள் செய்தவதாக முன்னர் அறிவித்த காரியங்களை செய்து முடிக்க இன்னும் பல நாட்கள் மேலதிகமாக தேவைப்படுகின்றது.

ஆனால் ஏற்கனவே வாக்குறுதியளித்த காலத்தில் பொதுத் தேர்தலை நடாத்துவதன் மூலம் தமது வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அதனூடாக மக்களை வசப்படுத்த வேண்டும் என்பதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக இருப்பதாக தெரிகின்றது.

சரி தேர்தலை நடாத்துவது என்று வருகின்ற போது தற்போதிருக்கின்ற முறையிலா அல்லது புதிய முறையிலா அதனை மேற்கொள்வது என்ற வாதப்பிரதி வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

புதிய முறைப்படி தேர்தலை நடாத்துவது என்றால் அதற்கு முன்னதாக எல்லை மீள்நிர்ணயம், புதிய தொகுதிகள் உருவாக்கம் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

எனவே புதிய தேர்தல் முறைமை வரைபை உருவாக்க குறைந்தது 3 மாதங்கள் அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது நடைமுறையிலுள்ள முறைமையின் அடிப்படையிலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு சாத்தியமிருக்கின்றது.

அதன்படி ஏப்ரல் 23ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாத பிற்பகுதியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் என்று வருகின்ற போது முன்னொருபோதுமில்லாத சவாலை தற்போதைய ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதியாக ஆக்கப்பட்ட மைத்திரிபாலதான் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றார். எனவே இரு கட்சிகளையும் தனது இரு கண்களைப் போல சரிக்கு சமமாக நடாத்த வேண்டிய இக்கட்டில் ஜனாதிபதி இருக்கின்றார்.

அந்தவகையில் மிகக் கவனமாக இவ்விரு கட்சிகளையும் அவர் கையாண்டு கொண்டிருக்கின்றார்;

இங்கு பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது அடுத்த பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதாகும்.

பிரதமருக்கான பனிப்போர்

இனிவரும் காலத்தில் நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதமர் கையிலேயே இருக்கும் என்பதால் அப்பதவியை பெறுவதற்கு இரு பிரதான கட்சிகளிடையேயும் கடுமையான பனிப்போர் ஆரம்பித்திருக்கின்றது.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் அதிக வெற்றியை பெற்றது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா போன்றோருடன் ஒன்றிணைந்து அவர் வகுத்த வியூகமே அலரி மாளிகையில் இருந்த மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பி வைத்தது.

அதற்காக ரணில் எடுத்த ரிஸ்க் மிக அதிகம். இத்தனையையும் செய்து நாட்டில் ஜனாதிபதியையும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மாற்றியமைத்துவிட்டு 100 நாட்களின் பின்னர் யாருக்காவது பிரதமர் பதவியை தாரை வார்த்துவிட்டு ஒதுங்கிப் போக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்புவாரா என்பது மிகப் பெரிய கேள்வி.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவராக தற்போதிருக்கின்ற நிமல் சிறிபால டி சில்வா பிரதமர் பதவிக்காக மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றார் என்பதை அவரது அண்மைக்கால அறிக்கைகளை ஆழமாக நோக்குவோர் புரிந்து கொள்வார்கள்.

எது எவ்வாறிருந்தபோதும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இப்பதவியில் கண் வைத்திருக்கின்றார்.

தனக்கு ஏற்பட்ட அவமானம், தோல்வி, மன அழுத்தம் என்பவற்றுக்கெல்லாம் வடிகாலாக இது அமையும் என்று அவர் நினைக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்ட பிற்பாடு பிரதமர் பதவி கிடைப்பதே அதிக அதிகாரங்களை தமக்கு தரும் என்றும் அதனை வைத்து வஞ்சம் தீர்த்துவிடலாம் என்று அவர் ஒரு கணக்கு போட்டிருப்பதாக தெரிகின்றது.

இதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்த எவரும் மீண்டும் வேறொரு பதவிக்காக போட்டியிட்டதில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இதற்கு விதிவிலக்கு.

தேவையென்றால் பிரதமரை விட குறைந்த  ஆனால் அதிகாரம் உள்ள பதவிக்காக கூட அவர் போட்டியிடுவார். அதனால் தனது கௌரவம் பாதிக்கப்படுமே என்று கவலைப்படுகின்ற ஒரு அரசியல்வாதியாக அவரை கருத முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபாலவையும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதற்கான களச்சூழலை அவர் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்.

ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே வேறு ஒரு ‘அரசியல்’ போய் கொண்டிருக்கின்றது. அவர்களில் சிலர் இன்னும் மஹிந்தவை துதித்துக் கொண்டிருக்க, வேறு சிலரோ சாடைமாடையாக விமர்சிக்கும் தைரியத்தை பெற்றிருக்கின்றார்கள்.

ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் தங்கியிருக்க, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, வாசுதேச நாணயக்கார, டிலான் பெரேரா உள்ளடங்கலாக முன்னர் அமைச்சர்களாகவிருந்த பலர் வேறு விதமான காய் நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகள் கடைசிக் கட்டத்தில் யாரை ஆதரிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாதிருக்கின்றது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.

ஜனாதிபதியின் பக்கம் ஒரு அணியினரும் முன்னாள் ஜனாதிபதியின் பக்கம் சிலரும் உள்ளனர். வேறுசிலர் மதில்மேல் பூனைகளாக இருக்கின்றனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் பிரதமராக போட்டியிடுவது என்றால் கூட அதற்கு கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான சம்மதம் அவசியம்.

ஆனால், மைத்திரிபால அதற்கு ஒருபோதும் இணங்கமாட்டார் என்பதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை.

ஜனாதிபதியாக மஹிந்த இருந்தபோது அவரது ஆட்சி சரியில்லை என்று கூறி மக்கள் ஆணையை கோரிநின்ற மைத்திரி, 6 மாதங்களின் பின்னர் மீண்டும் மஹிந்தவை பிரதமராக்க நினைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இது தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நையாண்டி செய்திருக்கின்றது. அதாவது ‘மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவாராயின் எந்த ஆடையை அணிந்து வருவார்’ என்ற தொனியில் மிக உறைக்கும்படியான கேள்வியை நாகரிகமாக கேட்டிருக்கின்றார் ஜனாதிபதி.

ஆனால் சு.க.சார்பில் நிமல் சிறிபால டி சில்வா அல்லது வேறு ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஜனாதிபதி அழகுபார்க்கும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரரிப்பாரா அல்லது சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் நபருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி ஒன்று தற்போது எழுந்திருக்கின்றது.

ஆனால் தான் ஜனாதிபதி என்ற அடிப்படையில் நடுநிலை வகிப்பேன் என்றும் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்றும் ஜனாதிபதியாக பதவியேற்று 10 நாட்களுக்குள்ளேயே மைத்திரி அறிவித்துவிட்டார்.

நிலைமைகள் தமக்கு சாதகமில்லாமல் போய்விடுமோ என்று முன்னாள் ஜனாதிபதி கருதும் பட்சத்தில் மீண்டும் பேரினவாத சக்திகள் இனவாத பிரசாரங்களை ஒரு ஆயுதமாக கையிலெடுக்கும் அபாயம் இருக்கின்றது.

அபாயா தொடர்பாக பொது பலசேனா அண்மையில் மீண்டும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இனவாத எண்ணம் கொண்ட சிங்கள மக்களை மீள தட்டியெழுப்புவதற்கான கைங்கரியமாக ஏன் இருக்க முடியாது?

மக்களின் எதிர்பார்ப்பு

மறுபுறத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதா என்பதில் பொது எதிரணியில் அங்கம் வகித்த கட்சிகளிடையே இருவேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால் அதை எப்போது நடாத்துவது என்பது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி முரண்டுபிடிக்கின்றது.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் அதிகரித்துள்ளனவோ அக் கட்சிகள் உடனடியாக ஒரு பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு விரும்புகின்றன.

ஆனால் வாக்கு வங்கி சரிவடைந்துள்ள கட்சிகளும் உள்வீட்டு பிரச்சினைக்குள் சிக்குண்டுள்ள இரு கட்சிகளும் இன்னும் தேர்தலை பிற்போடவே விரும்புகின்றன.

ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக இருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய மற்றும் அவர்களது கூட்டாளிகள் புரிந்த ஊழல் மோசடிகளுக்காக அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவின் சவாலை எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

உண்மைதான் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றால் மஹிந்தவுக்கும் சகாக்களுக்கும் எதிராக மறுகணகே நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஒருவேளை மஹிந்த அணி வெற்றி பெற்றிருந்தால் மைத்திரியை மட்டுமல்ல அவரது வீட்டு வேலைக்காரனையும் பிடித்து உள்ளே போட்டிருப்பார்கள்.

ஆனால் மைத்திரிபால அரசு அவ்வாறு செய்யவில்லை. மிக நாகரிகமாக நடந்து கொள்கின்றது. இது நல்லாட்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல அதில் ஒரு அரசியல் உத்தியும் இருக்கின்றது.

அதாகப்பட்டது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களஅதிகமாக உள்ள தொகுதிகளில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரையோ அல்லது அவரது சகோதரரையோ கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினால் சிங்கள பேரினவாதிகள் அதனை பிரச்சாரம் செய்வார்கள்.

இதனால் மஹிந்தவுக்கான அல்லது அவர் ஆதரவு தெரிவிக்கும் சு.க.வின் பிரதமர் வேட்பாளருக்கு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கின்றது. அத்துடன் மைத்திரிபாலவை சிங்கள தேசத்தில் இருந்து ஓரம்கட்டவும் கடும்போக்கு சக்திகள் முயற்சி எடுக்கும்.

எனவே, தேர்தல் முடியும் வரைக்கும் அல்லது தேர்தல் நெருங்கும் வரைக்கும் சர்வாதிகார மன்னர்களை விட்டுப்பிடிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்திருப்பதாக ஊகிக்க முடிகின்றது.

அதாவது – இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என்று மஹிந்தவுக்கு வாக்களித்த மக்களே கருதும் சூழல்தான் தற்போது கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதற்கான காலம் கனிவதற்குள் மைத்திரிபால அரசாங்கம் பொதுத் தேர்தலை நடாத்தி முடித்துவிடும். அதற்குப் பிறகுள்ள 6 வருட ஆட்சிக்காலத்தில் பழைய கணக்குகள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ளலாம். 100 நாட்களுக்குள் அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று பொது ஆளும் அணி கருதுகின்றது.

இவ்வாறு தேர்தலை மையமாகக் கொண்ட நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற சமகாலத்தில் கூடுமானவரை 100 நாள் வேலைத்திட்டத்தையும் நிறைவு செய்வதற்கு முயற்சிக்கின்றது. ஆனால் மக்கள் இந்த அரசாங்கத்திடமிருந்து இன்னும் எதிர்பார்க்கின்றனர்.

வாக்குறுதி அளிப்பது போல எல்லாவற்றையும் காலம் பிந்தாமல் செய்து முடிக்க முடியாது என்பது மக்களுக்கும் தெரியும். குறிப்பாக சிறுபான்மை மக்கள் வேறுபட்ட எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர். அதனாலேயே அதிகமான தமிழ், முஸ்லிம் மக்கள் தனக்கு  வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள் என்பதை ஜனாதிபதியே போகும் இடமெல்லாம் நன்றியோடு நினைவுபடுத்துகின்றார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக சண்டித்தனம் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடக்கம் பல்வேறு வழிகளில் அந்த நன்றியை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள் பறைசாற்றும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும் !

கடைசியாக ஒரு ஜோக்

தலைவரிடம் ஒரு அடிவருடி தொண்டன் ஓடிவந்தான்….

தலைவரே இம்முறையும் தேர்தலில் தர்மம் வெல்லும் போல் இருக்கின்றது’

‘ஓ….. அப்படியா? அப்படியென்றால் இந்த முறை என்னை போட்டியிட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கின்றாயா?’ என்று கேட்டார் தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*