சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை; அஞ்சவும் மாட்டோம் பின்வாங்கவும் மாட்டோம்; பள்ளிவாசல் தலைவர் உறுதி!

Aslam moulana (4) - Copy

-அன்ஷிப்- 

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது அரசின் நூறு நாள் திட்டத்துக்குள் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இது விடயத்தில் நாம் எவருக்கும் அஞ்சவும் மாட்டோம் பின்வாங்கவும் மாட்டோம்.

இவ்வாறு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் வை எம் ஹனீபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வென்றெடுப்பது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் காரியாலய மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மதின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மன்றத்தின் சார்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான பொறியியலாளர் எம்.ஐ.எம்.ஜெசீல், கலாநிதி ஏ.எம்.றஸ்மி, கலாநிதி எஸ்.எம்.ஹிலால், ஏ.எம்.றமீஸ், டாக்டர் என் ஆரிப், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்களான ஏ.பீர்முஹம்மது, எம்.ஐ.ஏ.ஜப்பார், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெப்பை உட்பட கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் இளைஞர்களும் என அறுபதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனை வெற்றி கொள்கின்ற பணியினை இந்த மக்கள் சார்பாக நாங்கள் முழுமையாக பொறுப்பேற்று இருக்கிறோம்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தினை அடைந்து கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பள்ளிவாசல் மரைக்காயர் சபையில் இருந்து ஒரு குழுவினை நியமித்துள்ளோம்.

இது விடயத்தில் இங்குள்ள அத்தனை அரசியல் பிரமுகர்களையும் அழைத்து அவர்களது ஒப்புதல்களை பெற்று வருகிறோம் அந்த வகையில் முதலில் சாய்ந்தமருது மண்ணை பிரதிநிதுத்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜமீல் இந்த விடயத்துக்கு பூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவர் இந்த பள்ளிவாசலுக்கு நேரடியாக வந்து அந்த ஒப்புதலை அளித்தார். இதனை அடைந்து கொள்வதற்காக முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்

அதன் பிற்பாடு எமது கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பள்ளிவாசலுக்கு நேரடியாக விஜயம் செய்து தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது உறுப்பினர்களை நாம் சந்தித்து, அவர்களது ஆதரவினையும் பெற இருக்கிறோம்.

இந்த சந்திப்புகளின் பின்னர் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களை சந்தித்து அவரது அனுசரணையுடன் உள்ளூராட்சி அமைச்சரை சந்தித்து, எமது கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தவுள்ளோம். இந்த அடிப்படையில் இதனை அடைந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். எமது எல்லா நடவடிக்கைகளையும் இப்போதைக்கு இங்கு பகிரங்கமாக விபரிக்க முடியாது.

அத்துடன் இக்கோரிக்கை தொடர்பிலான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக தேவை ஏற்படும் போதெல்லாம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் உதவியை நாம் கோருவோம். இந்த அமைப்பில் கல்விமான்கள், புத்திஜீவிகள், அனுபவசாலிகள், வர்த்தகர்கள் உட்பட பலவேறு தரப்பினரையும் உள்ளடக்கி உள்ளீர்கள் இதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. உங்களது உதவி, ஒத்துழைப்பு எமக்கு மிகவும் அவசியமானது. நீங்கள் எமக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் சில கருத்துகளும் ஆலோசைனைகளும் முன்வைக்கப்பட்டன..

“இந்த விடயம் தொடர்பாக பள்ளிவாசல் தீர்மானம் எடுத்து கடந்த 2 மாதகாலமாக பேச்சளவில் இருப்பது போல் தெரிகிறது. அரசின் நூறு நாள் திட்ட நிறைவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் இந்த விடயம் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது” என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் சுட்டிக்காட்டினார்.

“உரிய விடயங்கள் திட்டமிடப்பட்டு நடைமுறை சாத்தியமான வேலைத் திட்டத்தை மிகவும் துரிதமாக செய்ற்படுத்துவதற்கு பள்ளிவாசல் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

பொறியியலாளர் ஜெஸீல்

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாதாக எங்களின் வாக்குகளை பெற்ற பிரதிநிதிகளால் அது நிறைவேற்றி தரப்பட வேண்டும் என்றும் தேர்தலின் போது வந்து நின்று கொண்டு இம்முறை வாக்களியுங்கள் வெற்றி பெற்றால் பெற்றுத் தருகிறேன் என்ற கதைக்கும் அரசியல் வாதிக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் பொறியியலாலருமான எம் ஐ எம் ஜெஸீல் காட்டாமாக வலியுறுத்தினார்.

“அதிகாரம் இல்லாத ஒருவர்தான் எனக்கு வாக்களியுங்கள் பெற்றுத் தருகிறேன் என்று கூற முடியும். ஆனால் கடந்த காலங்களில் எமதூரின் வாகுகளை முழுமையாக பெற்ற இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு தற்போதும் முழுமையான அதிகாரம் உள்ளது. அவர்கள் இதயசுத்தியோடு முன்னுக்கு வருவார்களானால் எந்த தாமதமும் இன்றி இது வெற்றி கொள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இங்கு ஆவணம் தயாரிப்பு பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் ஆவணம் என்பதனை வைத்து கொண்டு காலம் கடத்த முடியாது. இப்போதைக்கு ஒருபக்க வேண்டுகோள் கடிதம் தாராளமாக போதுமானது. அதை எடுத்து கொண்டு உரியவர்களை சந்தித்து பெறுவதில் எந்த தாமதமும் காட்டப்பட கூடாது.

அரசியல்வாதிகளால் ஏமாறுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் நாம் இனியும் தயாரில்லை என்பதனை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உணர்த்த வேண்டும். எந்த வித செலவும் ஆட்பலமும் இன்றி இலகுவாக செய்யக் கூடிய ஒரு காரியமே நமக்கான உள்ளூராட்சி சபையை உருவாக்கும் விடயமாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் பொறியியலாளர் ஜெசீல் குறிப்பிட்டார்.

விரிவுரையாளர் ஏ.எம்.றமீஸ், டாக்டர் என் ஆரிப், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெப்பை ஆகியோரும் கருத்துகளை முன்வைத்து இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான வேலைத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இறுதியாக பதிலளித்துப் பேசிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா;

“அவசரப்பட்டு விபரீதமான நடவடிக்கைகளில் இறங்கி குழப்பங்களை ஏற்ப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ளக் கூடாது. இவ்விடயத்தை நாம் முழுமையாக பொறுப்பெடுத்து இருக்கிறோம். நிச்சயம் இதனை வெற்றி கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அவ்வாறு வெற்றி கொள்ளப்படாத சந்தர்பத்தில் இதை யாரெல்லாம் தடுக்க முனைகிறார்களோ எந்த எந்த அரசியல்வாதிகள் எல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் யார் என்பதை மக்களுக்கு பகிரங்கபடுத்துவோம். குத்பாக்களில் கூட பிரஸ்தாபிப்போம். துண்டுப்பிரசுரம் மூலமும் அவர்களை வெளிப்படுத்துவோம்..

ஆகையினால் அவசரப்படாமல் இன்னும் ஒரு சில நாட்கள் பொறுமையாக இருந்து எமக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நாம் ஒருபோதும் இக்கோரிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். எவருக்கும் பயப்படவும் மாட்டோம். உறுதியாக நின்று போராடுவோம். கடையடைப்பு செய்வதாக இருந்தால் கூட அதனையும் எமது பெரிய பள்ளிவாசலே முன்னின்று நடாத்துவோம். நீங்கள் எமக்கு பக்கபலமாக இருந்து கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*