கருவில் இருக்கும் குழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக்கலாமா?

9-அப்துல் கான்-

கரு உருவாகி நூற்று இருபது நாட்கள் ஆகிவிட்டால் அது மனிதன் என்ற அந்தஸ்துக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் அவ்வுயிரைக் கொன்றால் மனித உயிரைக் கொன்ற குற்றம் ஏற்படும். வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா?

அல்லது குறையுடையதாக இருக்கின்றதா? என்பதை நான்கு மாதங்களுக்குப் பிறகே ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியும். குழந்தை ஊனமுற்ற நிலையில் இருக்கின்றது என்பதை நூற்று இருபது நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடியும்.

இந்நிலையில் கருவைக் கலைத்தால் மனித உயிரைக் கொன்ற பாவத்தை நாம் செய்தவராகி விடுவோம்.

குழந்தை ஊனமாக இருக்கின்றது என்ற காரணத்துக்காக குழந்தையைக் கொல்ல நமக்கு அனுமதியில்லை. ஒரு மனிதன் விபத்துக்குள்ளாகி அவன் ஊனமாகிவிட்டால் இப்போது இவனைக் கொல்வது எப்படி பாவமோ அது போன்று கருவில் உள்ள குழந்தையைக் கொல்வதும் பாவமாகும். போரில் எதிரிகளைக் கொல்வதற்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டப்படி மரணதண்டனை பெற்றவர்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கொல்வதற்கும் மட்டுமே மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

இது அல்லாத வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனித உயிரைக் கொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள், ”பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்)
அவர்கள், ”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது,
முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.

புகாரி (6857) ஒருவன் தனக்கு ஏற்பட்ட சிரமத்தை பொறுத்துக்கொள்ளாமல் தற்கொலை செய்தால் அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பெரும்பாவம் என்று இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு போரில் (கைபரில்) நபி (ஸல்) அவர்களும், யூத இணைவைப்பவர்களும் சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். (போர் நடை பெற்ற போது ஒரு நாள் போரை நிறுத்தி விட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தினரும் தத்தமது படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர்.

முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின் போது யூதர்களான) இணைவைப்பவர்கüன் அணியிலிருந்து பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டு விடாமல் பின்தொடர்ந்து சென்று, தனது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ”அல்லாஹ்வின் தூதரே! (இன்றைய தினம்) இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்தது போல வேறெவரும் தேவை தீரப்போரிட வில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். ”(வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரக வாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார் தான் சொர்க்கவாசி!” என்று மக்கள் கூறினர்.

அந்த மக்களில் ஒருவர், ”நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும் அவருடன் இருப்பேன்” என்று கூறினார்.

(பிறகு அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீரதீரமாகப் போரிட்ட.) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வலி தாங்க முடியாமல்) அவசரமாக இறந்து போக விரும்பி, தனது வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து,
அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(அவரைப் பின் தொடர்ந்து சென்று இந்த காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று கூறினார். ”என்ன அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி (ஸல்) அவர்கüடம் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார் ஆனால் உண்மையில் அவர் நரக வாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகüன் (தீய) செயலைச் செய்து வருவார்.

ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகüல் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள். புகாரி (4201) சிரமம் என்பதற்காக ஒரு உயிரை நாம் கொல்லலாம் என்றால் நமக்கு சிரமம் ஏற்படும் போது நாம் தற்கொலை செய்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்கும். ஆனால் இஸ்லாம் இதை வன்மையாகக்
கண்டிக்கின்றது.

எனவே ஒரு உயிர் கஷ்டப்படும் என்பதற்காகவோ அல்லது அந்த உயிரால் பிறருக்குக் கஷ்டம் ஏற்படுகிறது என்பதற்காகவோ அதைக் கொல்ல நமக்கு அனுமதியில்லை. குழந்தை ஊனமாகப் பிறந்தால் அக்குழந்தைக்கும் பெற்றோர்களுக்கு ம் கடுமையான சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தச் சிரமத்தை இறைவனுடைய சோதனை என்று கருதி பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக இறைவன் அதிக நன்மைகளைத் தருகிறான்.

5318 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை.

அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமைகாக்கிறார்.

அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (5726) 2323 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறைநம்பிக்கைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிடத்திலோ தனது குழந்தையிடத்திலோ தனது செல்வத்திலோ சோதனை தொடர்ந்து இருந்தால் அவர் தன் மீது எந்த பாவமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்.

திர்மிதி (2323) 1418ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார்.

அவர் அதிலிரிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ”’இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திரிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

புகாரி (1418) ஸ்கேன் கருவிகள் மூலம் குழந்தை ஊனமாக பிறக்கும் என மருத்துவர்கள் கூறுவதை உறுதியாக நம்ப முடியாது.

ஏனென்றால் ஊனமுள்ள குழந்தை என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் போது அல்லாஹ்வின் நாட்டத்தால் ஆரோக்கியமான குழந்தைகளாகப் பிறக்கின்றன.

எனவே இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து குழந்தைக்கு ஏற்பட்ட இந்த ஊனத்தை தாயின் வயிற்றிலேயே குணமாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*