கல்விமான் ஜெமீல் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; மெட்ரோ மிரர் அனுதாபம்!

003

அல்லாஹ்வின் நாட்டப்படி இன் று தன்னுடைய நிரந்தர வீட்டிற்கு பயணமாகயிருக்கும் நமது அன்புக்கும் மரியாதைக்குமுரிய நாடறிந்த கல்விமான் அல்ஹாஜ்.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது பிரிவு பேரிழப்பு மிக்கது. எனினும் அன்னார் விட்டுச்சென்ற பணிகளை இளைய சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.

அல்ஹாஜ்.சாகுல் ஹமீத் முஹம்மத் ஜெமீல் தென்கிழக்கிலுள்ள சாய்ந்தமருதுவில் பிரபல்யமான குடும்பமொன்றில் 1940ம் ஆண்டு பிறந்தவர்.

காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல்-பாத்திமா கல்லூரி, கோழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில மொழி மூலமான கல்வியைக் கற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும்,அதே பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவில் விஷேட சித்தியையும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எம்ஏ.பட்டத்தையும் பெற்றார்.

கல்விப் பீடம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு இடமாற்றஞ் செய்யப்படுவதற்கு முன்பு,கொழும்பு பல்கலைக்கழகத்திலும் ஒரு வருடம் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டத்திற்காக இவர் மேற்கொண்ட ஆய்வினை வடமாகாணத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக தொடர முடியாமற் போயிற்று.

கல்வித்துறையின் சகல படித்தரங்களிலும் ஆசிரியராக, கல்லூரி அதிபராக, கல்வி உயர் அதிகாரியாக, உதவி பரீட்சை ஆணையாளராக, ஆசிரிய கலாசாலை முதல்வராக, பல்கலைக்கழக போதனாசிரியராக, கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவச் சபை உறுப்பினராக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற் பதிவாளராக, பாடநூல் மொழிபெயர்ப்பாளராக இருந்ததுடன், கல்முனை மாவட்ட அதிபர் சங்கத்தின் ஸ்தாபக தலைவராகவும், அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐந்து வருடங்கள் முஸ்லிம் சமய,பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சகத்தில் செயலாளராகவும், கல்வி,கலாச்சார, தகவல்துறை அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றி பின்னர் கலாச்சார, சமய அலுவல்களுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளராகவும் இருந்து பின்னாளில் இவ்வமைச்சகத்தின் ஆலோசகராகவும் கடமை புரிந்தார்.

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக இங்கிலாந்தின் ச்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் பயிற்சியம் பெற்றிருந்தார். அதேவேளை கடந்த சில வருடங்களாக தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.

இப்படி பல்முக திறமைகளைக் கொண்ட மர்ஹூம் SHM.ஜெமீல் அவர்கள் நாடறிந்த கல்விமான்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களின் பெருமதிப்பையும்,அன்பையும்,அரவணைப்பையும் பெற்றிருந்தார் என்பதை மறுக்கவோ் மறைக்கவோ முடியாது.

கல்விமான், சிறந்த நிர்வாகி, இலக்கியவாதி, நாட்டுப்புற பண்பாட்டியல் வரலாற்று ஆய்வாளர் என்பதுடன் இருபதுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும் இருந்ததுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

கிராமத்து இதயம் என்னும் இவரது நூலுக்கு 1995ம் வருடத்தில் சிறந்த ஆய்வு நூலுக்கான சாஹித்திய விருது கிடைத்தது.

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் நிகழ்வுகளின்போது (1997) நஜ்முல் உலூம் (கல்விச் செம்மல்) பட்டமளித்து,பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

இவரது துணைவியார் சித்தி ஆரிபா, ஒரேயொரு மகன் அல்ஹாஜ்.நஸீல் எம்.ஜெமீல் ஆகியோர் அன்னாரது சகல பணிகளிலும் தோள்கொடுத்து துணை புரிந்து வந்திருக்கிறார்கள்.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டிருந்த நமது அன்புக்குரிய அல்ஹாஜ். ஜெமீல் அவர்கள் சிறந்த பேச்சாளருமாவார் .

அன்னாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் எமது மெட்ரோ மிரர் ஊடக நிறுவன முகாமைத்துவ சபை, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை பரிசளிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*