வங்குரோத்து அரசியல் வாதிகளின் அஜெண்டாக்களுக்கு ஜும்ஆ பள்ளிவாசல் துணை போயுள்ளது!

bazeer1

-எம்.வை.அமீர்-

வங்குரோத்து அரசியல்வாதிகளின் அஜண்டாக்களுக்கு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் துணை போயுள்ளதை நினைத்து வேதனையடைவதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் வும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்களை கேட்ட போது அவர் மேலும் கூறியதாவது;

சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகமா? அல்லது பிரதேச சபையா? தேவை, என்று அவ்வேளையில் குழம்பிய நிலையில் காணப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேச சபையை உரிமையுடன் இப்போதைக்கு கோரும் அளவுக்கு ஸ்ரீ லங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கும் சாய்ந்தமருதுக்கு நாங்களே பிரதேச செயலகத்தை பெற்றெடுத்தோம்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஸ்ரீலங்கள் முஸ்லிம் காங்கிரஸினால் உருவாக்கப்பட்ட பிரதேச செயலக எல்லையைக் கொண்டு சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையையும் பிரகடனப்படுத்துவோம்.

சாய்ந்தமருது மக்களால் கோரப்படும் உள்ளுராட்சி சபைக் கோரிக்கையானது நியாயமான கோரிக்கை என்பதையும் குறித்த உள்ளுராட்சி சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தரும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு உத்தரவதமளித்துள்ள நிலையில், அரசியல் முகவரியற்ற சிலருக்கு சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு அதனூடாக தங்களது தனிப்பட்ட அரசியல் முகவரிகளை அடைந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட செயற்பாடே கடந்த 2015-06-15 ல் இடம்பெற்ற ஹர்த்தால் சம்பவம்.

உள்ளுராட்சி சபையை இன்று தருகிறோம், நாளை தருகிறோம் வர்த்தமானியில் பிரசுரமாகி விட்டது. போட்டோக் கொப்பியுடன் வருகிறோம், என்றல்லாம் நமது அப்பாவி மக்களை ஏமாற்றினார்கள் அதனைக்கூட மக்கள் நம்பி அவர்களின் பின்னால் அணிதிரண்டார்கள் பொய்மை நிலைப்பதில்லை என்ற நியதிக்கு அமைய இருந்த இடத்தில் இருந்தே வேறு அணிக்கு தாவிவிட்டார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இப்பிராந்திய மக்களின் அதிகபட்ச வாக்குகளை பெற்று இந்த மக்களாலேயே உயிருட்டப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் எந்த ஊருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் எல்லா ஊர் மக்களின் அனுசரணையுடனேயே சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது தலைவரின் தார்மீக கடமையாகும்.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை வழங்குவது தொடர்பில் ஏனைய ஊர் தரப்பினர்களுடன் பேசி சுமுகமான உத்தரவாதங்களை தலைவர் பெற்றுள்ள நிலையில் வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்தது போன்று மனங்களில் விரிசல்களை ஏற்படுத்துகின்றனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளான எங்களையும், உள்ளுராட்சி சபையுடன் தொடர்புபட்ட அமைச்சரிடம் அழைத்துச் சென்று சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வழங்க வேண்டியதன் அவசியத்தை தலைவர் விளக்கிய விதத்தை அறிந்திருந்தும் அங்கு வைத்து வழங்கிய வாக்குறுதியை பெற்றுக் கொண்டும் கனிந்துவரும் உள்ளுராட்சி சபைக்கான பிரகடனத்துக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருகின்ற நிலையில் மனங்களை நோகடிக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகாளானது சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை வழங்கக் கூடாது என வாதிடுபவர்களுக்கு வாயில் மெல்லுவதற்கு எதையோ வழங்குவதற்கு ஒப்பானது.

சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகத்தை வழங்கியது போன்று உள்ளுராட்சி சபையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்து விட்டால் இம்மக்களிடம் எதைக்கூறியும் தங்களது அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியாது என்ற ஜீவாமரணப் போராட்டத்தின் உச்ச கட்டமே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் அஜண்டாக்களுக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் துணை போயுள்ளதை நினைத்து வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

சந்திப்புக்களை ஏற்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளான தங்களது ஒத்துழைப்பை பெற்றுக் கொண்ட ஜும்மா பள்ளிவாசல் இறுதி முடிவுகள் எடுக்கின்ற வேளைகளில் தங்களை ஒதுக்கி செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2015-06-15 ல் இடம்பெற்ற ஹர்த்தால் சம்பவத்தில் முன்னிலை வகித்தவர்களை நோக்கினால் அவர்களில் அநேகர் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் அன்று முதல் இன்று வரை இருப்பவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளுக்கு ஆப்புவைக்கும் விதத்தில் தனிப்பட்ட சிலர் தங்களது அபிலாசைகளை அடைவதற்காக சாய்ந்தமருது மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் இம்மக்களின் வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்தே தீரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*