தவிசாளர், செயலாளர் ஆகியோரக்கும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டியுள்ளது!

P1050316

-பி. முஹாஜிரீன்-

“இந்தப் பாராளுமன்ற கால எல்லைக்குள் அட்டளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உறுதியளித்தள்ளது. மு.கா.வின் இரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் நான்காக பிரித்து வழங்குவதற்கான நிலைமை இருப்பதால், என்னை ஓரிரு நாட்களுக்குள் மாகாண அமைச்சை இராஜினாமாச் செய்ய வைத்து விட்டு அட்டாளைச்சேனைக்குரிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தலைமை வழங்கலாம்” என கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக தான் பதவியேற்றமை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை மாலை (28) அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்க கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சைப் பொறுப்பெடுத்தவுடன் அட்டாளைச்சேனை மு.கா. மத்திய குழு உறுப்பினர்களை அழைத்து அது தொடர்பாக விளக்கியபோது, இந்த மாகாண அமைச்சை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இதைவிட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையே எதிர்பார்த்து தமது ஆதங்கங்களையும் ஆத்திரங்களையும் வெளியிட்டனர். இருந்தாலும் கட்சித் தலைமை தற்போது எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை புரிந்துகொள்ள வைத்துள்ளோம்.

இருப்பினும், அட்டாளைச்சேனைக்கு மு.கா. தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் தலைமையும் உறுதியாக இருக்கிறது. தற்போது கட்சி எதிர்நோக்கியுள்ள சிக்கல்களுக்கு மத்தியில் அது காலதாமதமாகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேசம் அதனை முழுமையாக ஆதரித்து வருகின்றது. காலாகாலமாக இப்பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கை ஆதரவாளர்களால் விடுக்கப்பட்டக் கொண்டிருக்கிறது.

கடந்த தேர்தல் பிரசார காலகட்டத்திலும் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பிரதேசத்திற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார். இருந்தாலும் கட்சியைப் பாதுகாப்பதற்காகவும் கட்சியின் பிளவுகளை தவிர்ப்பதற்காகவும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் எல்லோரையும் சரியாக வழிநடாத்த வேண்டிய கடமையும் தiமைக்கு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்புகூட அட்டாளைச்சேனைக்கான தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது நிச்சயம் வழங்கப்படும் என தலைவர் வலியுறுத்திக் கூறினார்.

ஆனால் திடீரென திங்கட்கிழமை காலை என்னை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு இன்றே கிழக்கு மகாண சுகாதார அமைச்சை பொறுப்பேற்குமாறு கேட்டார்.

அப்போதுகூட இந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மாகாண அமைச்சைவிட பாராளுமன்றப் பிரதிநிதித்தவத்தையே எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலைமையில் மாகாண அமைச்சைப் பொறுப்பெடுத்தால் எப்படி? ஏனக் கேட்டபோது முதலில் இந்த மாகாண அமைச்சை தற்காலிகமாகப் பொறுப்பெடுங்கள் அது நிச்சயமாக வழங்கப்படும் என என்னைத் தலைவர் பணித்தார். இதனால் கட்சியின் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்றவகையில் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு இவ்வமைச்சை பொறுப்பேற்றேன்.

இவ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை பொறுப்பேற்பதற்காக அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் பிரதேச மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் என எல்லோரையும் அழைத்துச் சென்றேன்.

எதிர்பாராத விதமாக திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் மு.கா. வுக்கு பிரதிநிதித்தவம் கிடைக்காமை, அம்பாறையில் தற்போது மூன்று பிரதிநிதிகள் இருக்கின்றமை, கட்சியின் உயர்பதவிகளிலுள்ள அமைச்சர்களாக இருந்த தவிசாளர், செயலாளர் நாயகம் ஆகியோரக்கு பிரதிநிதித்துவம் வழங்க வெண்டிய நிலைமை, ஏனைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம் பொன்ற இடங்களுக்கும் பிரதிநிதித்தவம் இல்லாமை போன்ற பல சிக்கல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அட்டாளைச்சேனைக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் தலைவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாகவே இருக்கிறார்” எனவும் கூறினார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை மு.கா. உயர்பீட உறுப்பினர் யு.எம். வாஹிட் உட்பட மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

P1050321

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*