சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி மன்றம்; வென்று கொடுப்பது மு.காவின் தார்மீகக் கடமை!

Majeed (1)

(செயிட் ஆஷிப்)

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் விடுக்கும் கோரிக்கையை வென்று கொடுக்க வேண்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தார்மீகக் கடமையாகும் என அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸுக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒழுங்கு செய்திருந்த வரவேற்பு நிகழ்வு நேற்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது முதல் இதுகால வரை சாய்ந்தமருது மக்கள் இக்கட்சியை ஆதரித்து வருகின்றனர். குறிப்பாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடக்கம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை அம்மக்கள் எமது கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது அம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அந்த வகையிலேயே தமக்கான உள்ளூராட்சி சபையை முஸ்லிம் காங்கிரசே பெற்றுத்தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகையினால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பது எமது கட்சியின் தார்மீகக் கடமையாகும் என்பதை ஆணித்தரமாகக் கூறிக் கொள்கின்றேன்.

2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் மறைந்த பின்னர் கல்முனைத் தொகுதிக்கு தற்போது ஒரு பிரதி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது தேசிய மற்றும் இனத்துவ அரசியலில் இத்தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாக மாற்றியுள்ளது.

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்வானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமத்துவமான தீர்வாக அமைய வேண்டும் என்பது எமது முஸ்லிம் காங்கிரசின் எதிர்பார்ப்பாகும்.

மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கியிருப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தீர்வு மையத்தை அடையாளப்படுத்திச் சென்றுள்ளார். எனவே ஆட்சி அதிகாரப் பகிர்வின் போது தென்கிழக்கு மாகனம ஒன்றைப் பெற்றுக் கொள்வதே முஸ்லிம் காங்கிரசின் இலக்காகும்” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் யூ.எல்.எம்.காசீம் மௌலவி, செயலாளர் ஏ.மஜீத் உள்ளிட்ட நம்பிக்கையளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*