கல்முனை மாநகர சபை நிதிக்குழுவில் மீண்டும் தமிழ் பிரதிநிதித்துவம்; றியாஸ் விட்டுக் கொடுப்பு!

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழுவில் கடந்த ஒரு வருட காலமாக இழக்கப்பட்டிருந்த தமிழ் பிரதிநிதித்துவம், மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட இணக்க செயற்பாட்டின் பயனாக மீண்டும் கிடைத்துள்ளது.

முதல்வரின் வேண்டுகோளின் பேரில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் விட்டுக் கொடுப்பு செய்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கமலதாசன் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாநகர சபையின் நிதிக்குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்நியமனத்திற்கு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் ஏகமனதான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் நிதிக் குழுவைத் தெரிவு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது ஒரு தமிழ் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட கல்முனை மாநகர சபையில் இப்படியொரு குறைபாடு ஏற்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோருடன் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் நிதிக்குழுவில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை தான் காலக்கிரமத்தில் நிவர்த்தி செய்து தருவதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

KMCKMC (9) KMC (11) KMC (12) KMC-31-03 (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*