நெய்னா மரிக்காருக்குப் பிறகு புத்தளத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கிய அமைச்சர் றிஷாதைப் பாராட்டுகிறோம்!

AHM Azwer(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)

மர்ஹூம் எம்.எச்.எம்.நெயினா மரிக்காருக்குப் பிறகு புத்தளம் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம்.எச்.எம்.நவவியை தனது கட்சி தேசியப்பட்டியல் மூலம் நியமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாராட்டுவது எமது கடைமையென முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.

அல்-ஹாஜ் அஸ்வர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது புத்தளம் வில்பொத சிங்கள வித்தியாலயத்துக்கு ஒதுக்கப்பட்ட 18 இலட்சம் ரூபாய் பண்முகப்படுத்தப்பட்ட நிதியினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்துறையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,

மன்னாரிலிருந்து மற்றும் ஏனைய இடங்களிருந்தும் புலிகளால் துரத்தியடிக்கப்பட்டு தங்களுடைய உயிர்களைப் பணயமாக வைத்து, தங்களுடைய உயிர்களை கைகளிலே ஏந்திய வண்ணம் அன்று கற்பிட்டி கடற்கரைக்கு வந்து சேர்ந்த சுமார் 22ஆயிரம் பேர்களைப் பாதுகாத்து, கரைக்குச்
சேர்த்து அங்குள்ள தென்னந்தோப்புகளை அவர்களுக்கு வலுக்கட்டாயமாக எடுத்துக் கொடுத்து, குடியமர்த்தி, அத்தனையும் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை இறைவன் எனக்களித்தான்.

ஏனென்றால் புத்தளம் தொகுதிக்கான எம்.பியாக அன்று ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ என்னை நியமித்திருந்தார். எனவே ஜனாதிபதியின் உதவியைக் கொண்டுதான் அத்தனை வேலைகளையும் அவர்களுக்காகச் செய்தேன்.

வந்தவர்களை வாழ வைத்த பூமி என்ற வகையிலே பொன் விளையும் பூமியாகப் புத்தளத்தை வந்தடைந்தவர்கள் என்றும் கருதுகின்றார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புத்தளம் நகருக்கு இந்தப் பேருதவியை, இக்கட்சி செய்திருப்பதையிட்டு நான் பாராட்டுத் தெரிவிக்கின்றேன்.

15 வருட காலமாக அந்தத் தொகுதிக்குப் பொறுப்பான எம்.பியாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்காக வேண்டி ஒவ்வொரு விடயங்களையும் கவனிக்கக் கூடிய சந்தர்ப்பத்தை இறைவன் எமக்குத் தந்தான். அதன் மூலமாக பண் முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதியை நான் 15 வருட காலமாக புத்தளம் நகரின் வளர்ச்சிக்காக வேண்டி, அபிவிருத்திக்காக வேண்டி, அந்த மக்களுடைய சேம நலனுக்காக வேண்டித்தான் செலவழித்தேன் என்பதை ஒவ்வொரு புத்தளம் நகரின் குடிமகனும் நன்கறிவான்.

இப்பாடசாலையின் அதிபர் சமரஜீவ மிகவும் சிறப்பாகப் பணிபுரிகிறார். இப்பாடசாலை கல்விக்கும் நல்லொழுக்கத்துக்கும் முன்மாதிரியாக வளர்ச்சி கண்டு வருகிறது- என்றார்.

இவ்விழாவில் புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ, கல்வி அதிகாரி டபிள்யு.பி.எஸ். விஜேசிங்க, ஆராச்சிக் கட்டுவ பிரதேச சபையின் உறுப்பினர் சீ.எம்.எம். சரீப் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

புத்தளம் தொகுதியிலுள்ள வில்பொத, பாராவில்லு, புளிச்சாங்குளம் போன்ற இடங்களில் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் செய்த சேவைகளை முன்னிட்டு பாராட்டு விழாக்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*