நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் திரைப்பட சூத்திரதாரிகளுக்கு பலத்த கண்டனம்!

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிப்பதோடு இஸ்லாத்தை அவமதிக்கும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் பிரஸ்தாப அமெரிக்க திரைப்படத்தின் முன்னோட்டத்தை தாம் இணையத்தளத்தில் பார்வையிட்டதாகவும், அதில் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வேடந்தரித்து நடிப்பவர் ஒழுக்க மாண்புகளில் அக்கறையற்ற விரச உணர்வை தூண்டக்கூடியவராக பெண்கள் மத்தியில் நடந்து கொள்வதாக அருவருப்பாக காண்பிக்கப்படுவதை அறவே சகித்துக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் அமைச்சர் ஹக்கீம், பலத்த கண்டனத்திற்குரிய இத் திரைப்படம் மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்கனவே தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்தையும் நபிகள் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களையும் நிந்திக்கும் கேலிச்சித்திரங்கள் டென்மார்க் போன்ற நாடுகளில் வரையப்பட்ட போது அதன் பாரதூரமான பிரதிபலிப்பு உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்தினரை கொதித்தெழச் செய்து பலத்த கண்டனத்தையும், எதிர்ப்பையும் பரவலாக ஏற்படுத்தியது போல அமெரிக்கர்களும் இஸ்லாத்தின் ஜென்ம விரோதிகளான இஸ்ரேலியர்களும் கூட்டாக தயாரித்துள்ளதாக கூறப்படும் இந்த கீழ்தரமான திரைப்படமும் முஸ்லிம்களின் மன உணர்வுகளை வெகுவாக பாதித்து, அவர்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது நியாயமானதே என்றும் அமைச்சர் ஹக்கீம் தமது அறிக்கையில் மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

இஸ்லாம் உலகின் மாபெரும் சக்தியாக உருவாகிவருவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள மேற்குலக நாடுகள் காழ்புணர்ச்சியின் காரணமாக இஸ்லாத்தையும், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் நிந்திக்கும் விதத்தில் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாக இருக்குமென்றும் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. உலமா கட்சித் தலைவருக்கு இந்த விடயம் இன்னும் தெரிய இல்லை போலும் !

  2. “புதுடெல்லி: இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை இணையதளங்களில் இருந்து நீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    Hon நீதியமைச்சர் அவர்களே,
    முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை இல‌ங்கையில் உள்ள இணையதளங்களில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு (இல‌ங்கை பாராளுமண்றத்திலும் அமைச்ரவையிலும் குரல் கொடுக்குமாறு த‌ங்களை பணிவாய் கேட்டுக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*