கிழக்கில் நிவாரணம் சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசல்கள் முன்வர வேண்டும்; முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்!

NMC

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து நிவாரணங்களை சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அந்த மாகாணத்திலுள்ள அனைத்து ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கவுன்சில் மீயுயர் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பல உயிரிகள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதியடைந்துள்ளனர்.

இவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அவசர நிவாரண உதவிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நிவாரணம் சேகரிக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றபோதிலும் அவற்றை நிறுவன ரீதியாக ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஒழுங்குகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு நிவாரணம் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுமாயின் அவை நம்பகமானதாகவும் கட்டுக்கோப்புடையதாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுவதனால் அப்பணியை முன்னெடுப்பதற்கு சம்மந்தப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பில் குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துவதுடன் அன்றைய தினம் மக்களிடம் இருந்து நிவாரண உதவிகளை சேகரிக்க முடியும் எனும் ஆலோசனையையும் முன்வைக்கின்றோம் ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*