வரி செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது கல்முனை மாநகர சபை தீர்மானம்!

Com (2)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்கான வரிகளை செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரிகளை செலுத்தாதோர் மீது வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாநகர சபை கட்டளை சட்டத்தின் உப விதிகளின் பிரகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எமது கல்முனை மாநகர சபைக்கான வரிகளை செலுத்தாதோர் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிலுவைகளை அறவீடு செய்வது தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் அதனை கூடிய விரைவில் அமுலுக்கு கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

கல்முனை மாநகர சபைக்கு, பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சோலை வரி மற்றும் வர்த்தக ரீதியிலான கட்டணங்கள் உள்ளடங்கலாக சுமார் 08 கோடி ரூபா நிலுவையாக இருந்து வருகின்றது.

இதனால் திண்மக்கழிவகற்றல், தெரு விளக்கு மராமரிப்பு உள்ளிட்ட மக்கள் நலன்சார் சேவைகளை முன்னெடுப்பதில் மாநகர சபை நிர்வாக பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.

ஆகையினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி, சடட நடவடிக்கையில் இருந்து தம்மையும் தமது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு சம்மந்தப்பட்டோரைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*