சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; பிரதமரிடம் வாக்குறுதியை பெற்றுத்தந்த மு.கா.வே அதனை நிறைவேற்றியும் தரும்!

SLMC

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் நாட்டின் பிரதமரிடம் வாக்குறுதியை பெற்றுத்தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே அதனை நிறைவேற்றியும் தரும் என்று அக்கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தை வைத்து ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்ய நினைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவதற்கான ‘வீட்டுக்கு வீடு மரம்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழா நேற்று சனிக்கிழமை (13) சாய்ந்தமருதில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவற்றைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்தே வருகின்றோம். அது பிரதமர் அளித்த வாக்குறுதி. மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுத்தரப்பட்ட அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருகின்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதில் மாற்றுக கருத்துக்கு இடமில்லை. எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையுமில்லை.

ஆனால் சிலர் இதனுள் விஷமத்தனமாக புகுந்து விளையாடி, இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைகின்றனர். தமது சொந்த அரசியலை செய்வதற்காக மக்கள் மத்தியில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

சிலர் அடிக்கடி உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து, அரசியல் நெருக்கடிகளை கொடுத்து, அதையும் இதையும் அள்ளி வைத்து, அவரை குழப்ப முயற்சித்தாலும் கூட அவர் இது விடயத்தில் நிச்சயம் தெளிவாகவே இருக்கிறார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. நான் அவரை சந்திக்கின்ற போதெல்லாம் பிரதமரின் வாக்குறுதி பற்றி எடுத்துக்கூறி வருகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினாலும் நாட்டின் தலைமையினாலும் தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. இது மு.கா. தலைமையின் சொந்த அரசியல் இல்லை. எமது இயக்கத்திற்கு 95 வீதம் வாக்களித்து வருகின்ற இந்த ஊர் மக்களுக்கே ஏனையவர்களை விட மரத்தின் கனிகளை புசிப்பதற்கான அதிக உரிமை இருக்கிறது.

கல்முனை புதிய நகரமயமாக்கல் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான அங்கீகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு வழங்கியுள்ளார். சாய்ந்தமருதில் இருந்துதான் அத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதற்காக கரைவாகு வயல் பகுதியில் 23 ஏக்கர் காணி நிரப்பப்படவுள்ளது. சம்மாந்துறை தொடங்கி சாய்ந்தமருது ஊடாக மருதமுனை வரை புதிய நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.

சாய்ந்தமருது தோணாவை கடந்த 100 நாள் திட்டத்தில் எனது அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் சுத்தம் செய்திருந்தோம். அதன் அடுத்த கட்ட அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, பிரதித் தலைவர் யூ.எல்.எம்.காசிம் மௌலவி, செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களுடன் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*