அமீர் அலிக்காக நாடாளுமன்றத்தில் இடமளிக்கிறார் கமலா ரணதுங்க; இன்னும் ஒரு சில தினங்களில் ராஜினாமா!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான சட்டத்தரணி அமீர் அலியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க இன்னும் ஒரு சில தினங்களில் அப்பதவியை ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அமிர் அலி, கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் இவரை முதலமைச்சராக நியமிக்குமாறு தலா மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ மற்றும் தேசிய காங்கிரஸ என்பவற்றின் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் அமைச்சர் அதாவுல்லாவும் ஜனாதிபதியிடம் கூட்டாக வலியுறுத்திய போதிலும் அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமாக எதிர்த்ததால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகள் வழங்க நேரிட்டதால், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸிற்கோ எவ்வித அமைச்சுப் பதவியையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து பிரதி அமைச்சர் பதவியொன்றை வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் அமீர் அலியை தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவை ராஜினாமா செய்யுமாறு கேட்கப்பட்டதற்கு அமைவாக அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அதனை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்யும் கமலா ரணதுங்கவுக்கு தூதுவர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரிய வருகிறது.

அதேவேளை கமலா ரணதுங்க தற்போது சிறிது நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*