மாநகர சபையின் கொத்தணி சுத்திகரிப்பின் மூலம் கல்முனைக்குடியில் குப்பை அகற்றும் பணி!

Kkudy (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபையின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இன்று புதன்கிழமை கல்முனைக்குடி பிரதேசம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து அகற்றும் முழுநாள் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் மேற்பார்வையில் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.

இப்பணியில் ஈடுபடும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பு (HRDO), உபசார அனுசரணை வழங்கி வருவதுடன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பு அலுவலகம், கல்முனை பொலிஸ் நிலையம் என்பன ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இதன் மூலம் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்ற குப்பைகள் யாவும் சேகரித்து அகற்றப்பட்டு, அந்த இடங்கள் சுத்தம் செய்யப்படுவதுடன் அனைத்து வீதிகளிலும் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாகடர் கே.எல்.எம்.ரயீஸ், டாகடர் எம்.எம்.பாறூக், பள்ளிவாசல் தலைவர் டாகடர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்று முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருந்து சுமார் 80 ஆயிரம் கிலோ கிராம் குப்பை கூளங்கள் சேகரித்து அகற்றபட்டமை குறிப்பிடத்தக்கது.

Kkudy (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*