பாகிஸ்தானில் சார்க் மாநாடு; இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் பகிஸ்கரிப்பு!

article_1475065963-bd4bsaarc_28092016_gpi

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்க (சார்க்) மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென, இந்தியா அறிவித்துள்ளது.

அதன் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள், அண்மைக்காலமாகவே சிதைவடைந்து வந்த நிலையில், இந்தியாவின் காஷ்மிரிலுள்ள உறி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்த உறவு, மேலும் பாதிப்படைந்தது. ஐ.நா பொதுச்சபையிலும், இரு நாடுகளும் முரண்பட்டுக் கொண்டன.

இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, “பிராந்தியத்தில் அதிகரித்துவருகின்ற எல்லைப் பகுதித் தாக்குதலும் உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் ஒரு நாடானது தலையிட்டு வருகின்றமையும், 19ஆவது சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான சூழல் காணப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.

நிலவும் இச்சூழ்நிலையில், இஸ்லாமாபாத்தில் இடம்பெற முன்மொழியப்பட்டுள்ள மாநாட்டில், இந்திய அரசாங்கம் கலந்துகொள்ள முடியாமலுள்ளது” எனத் தெரிவித்தது. இந்தியாவின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில் தாங்களும் கலந்துகொள்ளப் போவதில்லையென, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.

தங்களது முடிவை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நேபாளத்திடம், இந்நாடுகள் அறிவித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இம்முறை இடம்பெறவுள்ள மாநாட்டில், இலங்கை, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் மாத்திரமே கலந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*