சாய்ந்தமருது புதிய மையவாடி புனரமைப்பு, பள்ளிவாசல் நூலக விஸ்தரிப்புக்கு உதவ முதலமைச்சர் இணக்கம்!

mosque-cm-1

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மையவாடியின் புனரமைப்பு திட்டத்திற்கு 56 இலட்சம் ரூபா நிதியை அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஒதுக்கீடு செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள நூலகத்தை விஸ்தரிக்கும் பொருட்டு தளபாடங்கள் மற்றும் நூல்களை கொள்வனவு செய்து தருவதற்கும் முதலமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதை அவரது அலுவலகத்தில் சந்தித்து, ஊரின் தேவைகள் குறித்து கலந்துரையாடினர். இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையையேற்றே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதி தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோரும் பள்ளிவாசல் சார்பில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா, பிரதி தலைவர் யூ.எல்.எம்.காசிம் மௌலவி, செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத், மரைக்காயர்களான ஏ.சி.முஹம்மத், எம்.ஐ.உதுமாலெப்பை, யூ.எல்.எம்.ஹனிபா, ஏ.ஏ.மஜீத், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் முதலமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் பெரிய பள்ளிவாசல் அலுவலகத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்து வழங்குவதற்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

mosque-cm-2mosque-cm-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*