முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புகளை தரமிக்கதாக வெளியிட பதிப்பகம் நிறுவத் தீர்மானம்!

hakeem-ilakkiyam-10

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புகளை தரமிக்கதாக அச்சிட்டு வெளியிடுவதற்காக பதிப்பகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நிந்தவூர், அட்டப்பளம் தோட்டத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் ஒருங்கிணைப்பாளர் நவாஸ் சௌபியின் ஏற்பாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய முன்னேற்றத்திற்கான எதிர்கால முயற்சிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சில விடயங்கள் குறித்து அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய நூல்களாக வெளிவருகின்ற போதிலும் அவை தரமிக்கதான அமைப்பில் வெளியிடப்படாமல் அவரவருக்கு முடியுமான அளவில் செய்து கொண்டு போகின்றனர் என்று சுட்டிக்காட்டிய கவிஞர் சட்டத்தரணி ஏ.எல்.றிபாஸ் அலறி, இவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் தமிழகத்தில் நூல்கள் வெளியிடப்படுவது போன்று நமது எழுத்தாளர்களினதும் நூல்களை தரமிக்க முறையில் வெளியிடுவதற்காக பதிப்பகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, அது சுயாதீனமாக செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆலோசனையை வரவேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், அது குறித்தான சாதக, பாதக நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் கலாநிதி எம்.ஏ.நுஹ்மான் போன்றோரை உள்ளடக்கியதாக நிபுணத்துவ குழுவொன்றை நியமித்து, நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்து, வெளியீட்டுப் பதிப்பகத்தை உருவாக்குவதற்கு வேண்டிய முயற்சிகளை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாக்களை வருடம் தோறும் அரச அனுசரணையுடன் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் நடத்தைச் செய்தல், மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், உரைகள் மற்றும் விடயங்கள் அடங்கிய சிறப்பு மலரினை வெளியிடுவது, அம்பாறை மாவட்ட இலக்கியவாதிகளின் செயற்பாடுகளுக்காக நிலையம் ஒன்றை அமைத்தல், பேராசிரியர் மர்ஹூம் எம்.எம்.உவைஸ் அவர்களின் அரபுத் தமிழ் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்களை மதுரை காமராஜர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து கொண்டு வந்து இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் சேகரிப்பது, கிழக்கு மாகாண சபையில் இல்லாதொழிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கலாசார, பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் பிரிவை மீண்டும் ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர்களான செய்யித் ஹஸன் மெளலானா, மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், ஆசுகவி அன்புடீன், எம்.எம்.எம்.நூறுல் ஹக், ஏ.எல்.எம்.சலீம், எஸ்.எல்.மன்சூர் உட்பட இளம் எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

hakeem-ilakkiyam-2 hakeem-ilakkiyam-8 hakeem-ilakkiyam-3 hakeem-ilakkiyam-4 hakeem-ilakkiyam-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*