நோய்களை மருந்துகள் மட்டும் குணப்படுத்துவதில்லை; வைத்தியர்களின் கவனிப்பும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும் அவசியமாகும்!

 

?

(அஸ்லம் எஸ்.மௌலானா, ஹாசிப் யாஸீன்)

நோய்களை மருந்துகள் மட்டும் குணப்படுத்துவதில்லை. மாறாக நோயாளிகளுக்கு வைத்தியர்களின் கவனிப்பும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும் அவசியமாகும் என சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பீ.கே.ரவீந்திரன் தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த ஆறு வருடங்களாக சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற டொக்டர் கே.ரவீந்திரனுக்கு இவ்வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டொக்டர் பி.கே.ரவீந்திரன் தனதுரையில் மேலும் கூறியதாவது;

“கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் றகுமானுடன் இணைந்து பல்வேறு திட்டமிடல்களை வகுத்து, அதில் அறைவாசியினை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றோம். ஏனைய வேலைத்திட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுமாயின் கிழக்கிலங்கையில் இவ்வைத்தியசாலை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக பரிணாமிக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்பிரதேச மக்களில் பெரும் பகுதியினர் நடுத்தர வருமானங்களை பெறுகின்றவர்கள். இவ்வைத்தியசாலையினை நம்பிவரும் நோயாளிகளை வைத்தியர்களும் தாதியரும் உத்தியோகத்தர்களும் சிறந்த முறையில் கவனிப்பதும் பராமரிப்பதும் முக்கியமானதாகும். நோய்களை மருந்துகள் மட்டும் குணப்படுத்துவதில்லை. மாறாக நோயாளிகளுக்கு வைத்தியர்களின் கவனிப்பும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும் அவசியமாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் ஏ டபிள்யூ.எம்;சமீம், வைத்திய நிபுணர்களான டொக்டர் ஏ.எம்.றசீன், டொக்டர் எம்.எம்.ஹபீழ், கண் வைத்தியர் டொக்டர் எம்.எம்.ஏ.றிசாட், உளவள வைத்தியர் டொக்டர் எம்.சறாப்தீன், தர முகாமைத்துவ கட்டுப்பாட்டு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சத்திர சிகிச்சை நிபுணர் ரவீந்திரன், இப்பகுதி மக்களுக்கும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் ஆற்றிய உயரிய சேவைக்காக விஷேடமாக வைத்திய அத்தியட்சகரினால் தங்க மோதிரம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ரவீந்திரனின் இடத்திற்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஏ டபிள்யூ.எம்;சமீம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

?Dr (2) Dr (6)

?

Dr (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*