மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நல்லாட்சியிலும் குறைந்தபாடில்லை..!

1

(பிறவ்ஸ்)

ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள, புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

திஹாரி உம்முல் குரா தஜ்வீத் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது;

இந்த வருட இறுதியில் சர்வதேச அல்குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தவுள்ளோம். மாற்றுமதத்தவர்கள் தவறான அர்த்தங்களை கற்பிக்கின்ற அல்குர்ஆன் வசனங்களுக்கு இந்த மாநாட்டின்போது சரியான தெளிவுகளை வழங்கவுள்ளோம். இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மார்க்க அறிஞர்களை அழைக்கவுள்ளோம்.

மார்க்க கல்வியில் முஸ்லிம்கள் காட்டும் ஆர்வம் குறித்து தவறான சிந்தனை கொண்டவர்கள், மத்ரஸாக்களை பயங்கரவாதத்தின் விளைநிலங்களாக சித்தரித்துக் காட்டுகின்றனர். இவ்வாறான சிந்தனை கொண்டவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதன்மூலம் முஸ்லிம் சமூகம் குறித்த சரியான பார்வையை ஏற்படுத்த முடியும்.

உலக முஸ்லிம் சனத்தொகையில் 55 சதவீதமானோர் சிறுபான்மையாகவே பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் விட்டுக்கொடுப்புடன் தங்களது விடயங்களை சாதித்துக்கொள்கின்ற ஒரு பக்குவம் இருக்கவேண்டும். சகிப்புத்தன்மையால் வளர்ந்த இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் நாம், எமது தனித்துவம் இழக்கப்படாத நிலையில் மாற்று மதத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இன்னுமொரு சாரார் கடைப்பிடிக்கும் அகீதா, பழக்கவழக்கங்களை பொறுமையில்லாமல் தங்களுக்குள்ளேயே தர்க்கம் செய்வதால், மாற்று மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து தவறான புரிதல்களை ஏற்படுத்தப்படுகின்றன. இதை லாவகமாக பயன்படுத்த முனைகின்ற தீவிரவாதப் போக்குடைய சில அமைப்புகளுக்கு தீனிபோடுகின்ற ஒரு விடயமாக இது மாறிவருகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவெடுத்த சில பேரினவாத சக்திகள், முஸ்லிம் விரோத செயற்பாடுகளை தூண்டிவிட்ட காரணத்தினால் நாங்கள் பல சொல்லொணா துன்பங்களை அனுபவித்தோம். நல்லாட்சியில் அந்த நிலை மாறும் என்று எதிர்பார்த்தாலும், ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு எதிரான தலையீடுகளை நாங்கள் சாதுரியமான முறையில் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*