இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவியின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பிரதம நீதியரசர் உத்தரவு!

????????????????????????????????????

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவியின் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் உத்தரவிட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பிரதம நீதியரசர் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இம்மனு மீதான வாதத்தின்போது குறிப்பிடுகையில்;

இம்மாணவி மன்னார் மாவட்டத்தில் பிறந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் அனுராதபுரம் மாவட்டத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்றுள்ளதுடன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் கல்வியைத் தொடர்ந்து, அங்கேயே ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையை எழுதியிருக்கிறார்.

பின்னர் இம்மாணவியின் பெற்றோர் மன்னாரில் மீளக்குடியேறியதனால் இவர் மன்னாரில் ஜீ.சி.ஈ.உயர்தர படிப்பை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அங்கு வசதியீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் சேர்ந்து கல்வி கற்றுள்ளார்.

இதன் நிமித்தமே இம்மாணவி கடந்த 2016ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருக்கிறார். ஆகையினால் பிரிதொரு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோன்றினார் எனத் தெரிவித்து, இவரது பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதானது அநீதி என்பதுடன் இவரது அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலுமாகும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாதத்தை செவிமடுத்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப்; குறித்த மாணவியின் ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு, அவரது பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டதுடன் இம்மாணவிக்கு எந்த மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழக அனுமதியை வழங்க வேண்டும் என தீர்மானித்துக் கொள்ளுமாறும் அறிவித்தார்.

இவ்வழக்கின் மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பருடன் சட்டத்தரணி எம்.எம்.நவாஸ் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பி.சுரேகா ஆஜராகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*