முஸ்லிம் காங்கிரஸை நெருப்புக்கிடங்கில் போட்டு உருக்க வேண்டும்; ஹசன் அலி ஆக்ரோஷம்..!

Hasan-ali_CI

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தான் நேசிக்கும் தங்க மோதிரம் தன் விரலில் போடுவதற்கு ஒத்துவராவிட்டால், விரலுக்கேற்ப மாற்றியமைக்க அந்த மோதிரத்தை நெருப்பில் போட்டு உருக்குவது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் ஒரு முறை நெருப்புக்கிடங்கில் போடத்தான் வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்திக் குழுவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் முன்னாள் தலைவர் எம்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் பெரும் தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கி, வளர்த்தெடுத்த எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கம் இன்று ரவூப் ஹக்கீம் எனும் தனி நபரின் அதிகாரப் பசிக்கு இரையாகியிருப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்துகின்றேன். கடைசியாக நான் கலந்து கொண்ட உயர் பீடக் கூட்டத்தில் இருந்து நான் கண்ணீர் வடித்துக் கொண்டே வெளியேறினேன்.

கட்சியின் தலைமைப் பதவியானது கிழக்கிற்கு வெளியே இருக்கின்றபோது அதற்கடுத்த நிலையிலுள்ள செயலாளர் பதவியானது கிழக்கில் இருந்து வந்தமை ஒரு வலுவான மரவாக காணப்பட்டது. ஆனால் இன்று ரவூப் ஹக்கீம் தலைவர் பதவியுடன் சேர்த்து செயலாளருக்கான அதிகாரத்தையும் கையகப்படுத்தியுள்ளார். தான் நினைக்கின்ற, தனக்கு வாசியான எந்தவொரு வேலையையும் இன்னொருவரின் அனுமதி பெறாமல் செய்து கொள்வதற்காகவே அவர் இந்த துரோகத்தனத்தை மேற்கொண்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரையான பல சந்தர்ப்பங்களில் கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுப்பதற்கு அவருடன் நான் உடன்பட்டுச் செயற்படவில்லை என்பதாலேயே அவர் என்னை செயலாளர் பதவியில் இருந்து விரட்டியடித்துள்ளார்.

எனது இணக்கம் இல்லாமல் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நான் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தபோது, கட்சியை தடை செய்யும் முடிவுக்கு தேர்தல் ஆணையாளர் வந்திருந்தார். அதன் காரணமாக என்னுடன் தனிமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரவூப் ஹக்கீம் முன்வந்தார்.

எமது கட்சியின் பிரதித் தலைவர் யூ.ரி.எம்.அன்வரின் அலுவலகத்தில் நடந்த அச்சந்திப்பில் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது விட்டு என்னிடம் சொன்னார், சல்மான் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யத் தயாராகுங்கள் என்றார். அது சரி எனது செயலாளர் பதவி எங்கே என்று அப்போது அவரிடம் நான் கேட்டேன். அதனை பெப்ரவரியில் நடக்கவிருக்கின்ற பேராளர் மாநாட்டில் செய்து கொள்வோம் என்று பதிலளித்தார்.

மறுநாள் தேர்தல் ஆணையாளரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது அவர் என்னிடம் சல்மானின் ராஜினாமாக் கடிதத்தை நீட்டினார். நானும் நம்பினேன். 2015 பேராளர் மாநாட்டில் மன்சூர் ஏ.காதர், செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையாளர் முன்னிலையில் நான் ஏற்று இணக்கம் தெரிவித்தேன்.

அதன் பிறகு ரவூப் ஹக்கீமைக் காணவில்லை. இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது விட்டு, சல்மானின் ராஜினாமாக் கடிதத்தையும் காட்டி என்னை இப்படி ஏமாற்றியவர் சமூகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுவார் என்று சிந்தித்துப் பாருங்கள். அல்குர்ஆன், ஹதீஸ் என்பவற்றை யாப்பாகக் கொண்டுள்ள நமது கட்சியின் தலைவரது நடத்தைகள் எந்தளவுக்கு கீழ்த்தரமானதாக இருக்கிறது என்பதை பாருங்கள்.

எந்த நோக்கத்திற்காக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதனை சற்றும் கணக்கில் எடுக்காமல் ரவூப் ஹக்கீம் தனது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக உயர் பீட உறுப்பினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தான் நினைத்தவாறு இக்கட்சியை நடத்திச் செல்கின்றார்.

தான் வகிக்கும் கபினட் அமைச்சுப் பதவியை தனக்கு நிகராக வேறு எவரும் இக்கட்சிக்குள் பெற்று விடக்கூடாது என்பதில் அவர் கடுமையாக இருக்கிறார். கட்சியின் அடிநாதமாக திகழ்கின்ற அம்பாறை மாவட்டத்திற்கான அமைச்சுப் பதவியையே ரவூப் ஹக்கீம் வைத்திருக்கிறார். அந்த அமைச்சில் கூட நம்மவருக்கு முன்னுரிமை கிடையாது.

முன்பு அதாஉல்லாவின் அமைச்சிலும் சரி, தற்போது ரிஷாத் பதியுதீனின் அமைச்சிலும் சரி, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கணிசமானோர் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீமின் அமைச்சில் ரஹ்மத் மன்சூரை தவிர அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வேறு எவரும் கிடையாது. கடந்த 17 வருடங்களாக அவர் அம்பாறை மாவட்டத்திற்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கட்சிக்குள் மஷூராவும் இல்லை. ஜனநாயகமும் இல்லை. எல்லாமே ரவூப் ஹக்கீமின் சிந்தனைதான். அவர் நினைப்பதுதான் நடக்க வேண்டும். அதற்கு உயர் பீட உறுப்பினர்கள் ஆமாம் சாமி போட வேண்டும் என எதிர்பார்க்கிறார். உயர் பீடத்தில் அப்படித்தான் நடக்கிறது. அவரது அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்கும் எவரும் கட்சியில் இருக்க முடியாது.

இப்படியொரு சர்வாதிகார தலைமைத்துவத்தின் தேவைக்காகவா கட்சியை பாதுகாக்க வேண்டும் என கூறுகிறார்கள். இதனால் சமூகத்திற்கு என்ன இலாபம் என்பதை பார்த்தால் நிச்சயம் பூச்சியம் என்பதைத் தவிர வேறு எதுவும் கிடையாது.

தனது தனிப்பட்ட சொகுசுகள் பறிபோய் விடக்கூடாது, அமைச்சுப் பதவியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமூகம் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதில் மாத்திரம் அவர் குறியாக இருந்து வருகின்றார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*