கொழுத்த சீதனம் வாங்கிய மாப்பிள்ளைகள் போன்றே முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தில் இருக்கின்றனர்

Anzil

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொழுத்த சீதனம் வாங்கிக் கொண்டு திருமணம் முடித்த மாப்பிள்ளைகள் போன்றே இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிருப்திக் குழுவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அன்ஸில் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் பங்கேற்புடன் சாய்ந்தமருது மத்திய குழுவின் முன்னாள் தலைவர் எம்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த மேடையில் ஹசன் அலி அவர்கள் கட்சியின் ஒழுக்க நெறிக்கோவை எனும் புத்தகம் ஒன்றைக் என்னிடம் காண்பித்தார். நான் கடந்த பத்து வருடங்களாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினராக இருந்து வருகின்றேன். ஆனால் எனக்கு இக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரினால் எழுதப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கான இந்த ஒழுக்க நெறிக்கோவை காட்டப்படவில்லை. கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் எவருக்குமே இப்படியொன்று இருக்கிறது என்பது கூடத் தெரியாது.

இந்த ஒழுக்க நெறிக்க கோவையை அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக கடைப்பிடித்தொழுக வேண்டும் எனவும் அதனை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. களவு, ஊழல், மோசடி, வட்டி, காமம், விலக்கப்பட்டவற்றை குடித்தல், உண்ணல் போன்ற பெரும் குற்றங்களை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவற்றில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது இக்கட்சிக்குள் இதுவெல்லாம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நாம் எத்தனையோ தடவை கூறியும் அவர் அதனை கணக்கில் எடுக்கவில்லை.

ஆனால் அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்திய கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை உடனடியாக கட்சியிலிருந்து விலகியுள்ளார். உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயற்கை நீதிக்கோட்பாட்டின் பிரகாரம் குற்றம் சுமத்தியவர், சுமத்தப்பட்டவர் என்கின்ற இரு தரப்பையும் விசாரித்தே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிபதியாக இருந்து கொண்டு அவரே தீர்ப்பை வழங்க முடியாது என்பதும் அமுலில் உள்ள நிலையில் அக்கோட்பாடு மீறப்பட்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தலைவராக இருந்து கொன்டே தன் மீது குற்றம் சுமத்தியவருக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அது போன்றதொரு குற்றச்சாட்டை சுமத்திய ஹசன் அலியை கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது மாத்திரமல்லாமல் உயர் பீடத்திலும் அவருக்கு ரவூப் ஹக்கீம் இடமளிக்கவில்லை. அது போன்றே நானும் அவரை நியாயமாக விமர்சிக்க முற்பட்டதனால் தூக்கியெறியப்பட்டுள்ளேன். ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் இந்த அநியாயங்கள் எல்லாவற்றையும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் அனைவரும் தமது சுயநலன்களுக்காக மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

எமது சமூக விடுதலைக்கான கட்சி, ரவூப் ஹக்கீம் எனும் தனி மனிதரினால் பிழையாக வழி நடத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொண்ட பின்னரும் எவ்வாறு அவருக்கு பின்னால் செல்ல முடியும் என்பதை அனைவரும் அவரவர் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டும். உயர் பீட உறுப்பினர்கள் மாத்திரமல்ல, இக்கட்சியை தோளில் சுமந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் கட்சிக்காக வாக்களித்து வருகின்ற மக்களும் இதனை உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.

நாம் ரவூப் ஹக்கீம் மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இப்படியொரு பகிரங்க மேடையில் விவாதிப்பதற்கு அவர்கள் தயாரா என சவால் விடுக்கின்றோம். முடிந்தால் வாருங்கள் உரிய விடயங்களை விவாதிப்போம். அதனை விடுத்து எம்மீது அபாண்டங்களை சுமத்த வேண்டாம். அதாவுல்லாஹ்வினதோ ரிஷாத் பதியுதீனினதோ கயிற்றை விழுங்கிக் கொண்டு பணத்துக்காகவும் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்காகவும் நாம் இப்படி செயற்படுவதாக கூறி மக்களை திசை திருத்த அவர்கள் முற்படுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் பணம், பதவி எல்லாம் தருவதாக நாம் விலை பேசப்படுகின்றபோது அதாவுல்லா அல்லது றிஷாத்தின் பின்னால் நாம் ஏன் போக வேண்டும் எனக் கேட்க விரும்புகின்றேன்.

சாய்ந்தமருதில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் பேசியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அவர் சொன்னார், இந்தக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் தலைவர் உட்பட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ள என் மனம் நாடுகிறது என்றும் கூறினார். கட்சிக்கு தலைமை தாங்குகின்ற வல்லமை ரவூப் ஹக்கீமுக்கு கிடையாது என்றும் அவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.

ஆனால் அண்மையில் கல்முனைக்குடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அதே ஜவாத் என்ன கூறியிருக்கிறார், மறைந்த தலைவர் அஷ்ரப் செய்யாத எந்தத் தவறை தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் செய்து விட்டார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதன் மூலம் ஹக்கீமை நியாயப்படுத்துவதற்காக மர்ஹூம் அஷ்ரப்பை அவர் கேவலப்படுத்தியுள்ளார். அப்போது அவ்வாறு பேசாதே என்று தடுப்பதற்கு எவரும் துணியவில்லை. எதை எப்படிக் கூறினாலும் ரவூப் ஹக்கீம் பிழை செய்கிறார்தான் என்பதைத்தான் ஜவாத் அந்த மேடையில் பறைசாற்றியுள்ளார்.

இப்படி தனது சுயநலன்களுக்காக கட்சியை தவறாக பயன்படுத்தி வருகின்ற ரவூப் ஹக்கீமிடம் இருந்து இக்கட்சியை மீட்க வேண்டும் என்பதற்காகவே நாம் மேடை போட்டு உண்மைகளை சொல்லி வருகின்றோம். அதற்கான சுதந்திரம் கூட இந்த நல்லாட்சியில் மறுக்கப்படுகிறது. மக்கள் வாக்குகள் போடுகின்ற இயந்திரமாக இருக்கும் வரை ரவூப் ஹக்கீம் இந்த கட்சியையும் சமூகத்தையும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்வார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சம்மந்தன் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கின்றபோது முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கி வருகின்ற எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாமல் ஆட்சியின் பங்காளராக இருக்கின்ற நமது மு.கா. தலைமை மௌனியாக இருக்கிறது என்றால் அதன் தாற்பரியம் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொழுத்த சீதனம் வாங்கிக் கொண்டு திருமணம் முடிக்கின்ற மாப்பிள்ளையை அந்த வீட்டில் மாமியாவும் மதிப்பதில்லை, மாமனாரும் மதிப்பதில்லை, மனைவி கூட மதிப்பதில்லை. அது போன்றே நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளான அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*