அல்-கொய்தாவுடன் இணைகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

article_1492523940-312fISIS-2_18042017_GPIjavahiri

ஈராக்கில் மொசூல் நகரிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை இலக்கு வைத்து, அந்நாட்டுப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், அல்-கொய்தா குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவலை, ஈராக்கின் உப ஜனாதிபதி அயாட் அல்லவி வெளியிட்டார். ஈராக் தொடர்பான தகவல்களை அறிந்த தகவல் மூலங்களிடமிருந்து, இந்தத் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

“கலந்துரையாடல் ஆரம்பித்து விட்டது. [ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்] பக்தாதியையும் [அல்-கொய்தா தலைவர்] ஸவஹிரியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களிடையே, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, அல்-கொய்தாவிடமிருந்து 2014ஆம் ஆண்டில் பிரிந்ததோடு, அதன் பின்னர், இரண்டு குழுக்களுக்குமிடையில் முரண்பாடே நிலவி வந்தது.

குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் நடவடிக்கைகளை, மிலேச்சத்தனமானது என வர்ணித்து வந்த அல்-கொய்தா, இஸ்லாமை அவர்கள் பின்பற்றவில்லை என்று தெரிவித்து வந்தது. இந்நிலையிலேயே, இணைவது பற்றி, தற்போது பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொசூலைக் கைப்பற்றும், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடனான ஈராக்கின் படை நடவடிக்கை, வெற்றியளித்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகள், ஈராக்கின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*