வில்பத்து விவகாரம்; முஸ்லிம்கள் நியாயம் பெறுவதற்கான நகர்வுதான் என்ன?

Noorul Haguவடக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முக்கிய பாத்திரம் வகித்துவருபவர் என்பதை அவரது பரபரப்பான பல செய்திகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் வடபுலத்து முஸ்லிம்களின் பிரச்சனையில் அதிலும் குறிப்பாக வில்பத்து காணி விவகாரத்தில் ரிஷாத் பதியுதீனுக்கு பாரிய அக்கறை இருந்துவருவதாக இதுவரை மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வில்பத்து விவகாரத்தில் சரியான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் இணைந்து தற்போது செயலாற்றி வருவதற்கு ஒப்புக்கொண்ட நிலையிலான இயங்கியலை முடுக்கிவிட்டிருக்கின்றனர். இதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நெறிப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

வில்பத்து காணி விவகாரத்தில் ரவூப் ஹக்கீம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டை ரிஷாத் பதியுதீனின் தரப்பினர்களும் வடபுலத்து முஸ்லிம்களின் ஒருபகுதியினரும் இதற்கு முன்னர் முன்வைத்து வந்திருந்த போதிலும் அவர் வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி நடைபெற்றிருக்கின்றது என்பதை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சூழலில் இவ்விரு அமைச்சர்களும் தற்போது இணைந்து இவ்விவகாரத்தில் நீதி தேடி புறப்பட்டிருக்கின்றனர். இதற்கு இசைவாக அப்பிரதேச மக்கள் போராட்டங்களைச் செய்யவும் துணிந்திருக்கின்றனர்.

உண்மையில் வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து எவையும் இராத போதிலும் அதனை ஒரு தீர்வுக்கு கொண்டுவருவதற்கு ரிஷாத் பதியுதீன் அங்கும் இங்கும் பத்திரிகையாளர் மாநாடுகளையும் கூட்டங்களையும் நடாத்திவந்த போதிலும் உண்மையில் அதற்குத் தேவையானதும் சரியானதுமான அரசியல் நகர்வை எடுத்திருந்தாரா என்கின்ற ஒரு வினாவையும் ரிஷாத் பதியுதீன் மீது நாம் தொடுக்க வேண்டியிருக்கிறது.

வில்பத்துவை அண்மித்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளை காடாக அடையாளப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். ஆகவே ஜனாதிபதி ஒரு மூடுமந்திரமாக இதனை வைத்திருந்து திடீரென செய்த ஒரு செயற்பாடு இது அல்ல. மாறாக பல மாதங்களுக்கு முன்னர் அறிவிப்புச் செய்திருந்த நிலையில்தான் கடந்த மார்ச் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனைச் செய்திருக்கின்றார்.

அப்படியானால் இங்கு இரண்டு கேள்விகள் நம்மிடம் எழுகின்றது. ஒன்று இந்த வில்பத்து பிரச்சனையில் ரிஷாத் மிக அக்கறை எடுத்து குரல் கொடுத்திருந்த போதிலும் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி எந்த முயற்சியையும் எடுத்து, அமைச்சரை அழைத்ததாக இன்றுவரை செய்திகள் எதுவும் இல்லை.

மற்றொன்று வில்பத்து பகுதியை காடாக பிரகடனப்படுத்துவதை ஜனாதிபதி அறிவித்ததில் இருந்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் வரையான இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த அமைச்சரவை கூட்டங்களில் ரிஷாத் பதியுதீன் எத்தனை தடவைகள் இது குறித்து பேசி இருக்கின்றார் என்பதுமாகும்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் ரிஷாத் பதியுதீனோடு கலந்துரையாடாவிட்டாலும் கூட ஏனைய குடியியல் சமூகத்தினர்களுடனோ அல்லது முஸ்லிம் அமைப்புக்களுடனோ இது பற்றி பேசுவதற்கு எந்தவிதமான எத்தனிப்புக்களையும் செய்யாத ஒரு குறைபாடு இங்கு காணப்படுகிறது. இது நல்லாட்சியின் தலைவரிடம் காணப்படக் கூடிய ஒரு நேர்மையான பண்பாக ஒருபோதும் பார்க்க முடியாது.

அதேநேரம் இவ்விடயத்தில் ரிஷாத் மாத்திரமன்றி அப்பிரதேச குடியியல் சமூகத்தினர்களும், மற்றும் புத்திஜீவிகளும் உலமாக்களும் இது சம்பந்தமாக தங்களது எதிர்க் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். அதனைக்கூட ஜனாதிபதி கண்டுகொள்ளாத ஒரு நிலைப்பாடுதான் இதில் இருக்கின்றது.

இது இரண்டுவிதமான கருத்துக்களை நம் மத்தியில் ஏற்படுத்தவல்லது. ஒன்று ஜனாதிபதி வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம் மக்களினால் எடுத்துக் கூறப்படுகின்ற எந்த நியாயங்களையும் உள்வாங்கத் தேவையில்லை என்கின்ற ஒரு கடும் போக்கிலும் இவ்விவகாரத்தில் சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகளின் இனவாத மேலீட்டுக் கருத்துக்களோடு கைகோர்க்கும் செயற்பாட்டிலும் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

அமைச்சர் ரிஷாத் வில்பத்து விவகாரத்தில் பிழையான அணுகுமுறைமைகளை கையாண்டவர் என்கின்ற ஒரு குற்றச்சாட்டை சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் உட்பட சுமத்திவருகின்ற அபாண்டங்களில் உண்மை இருக்குமோ என்கின்ற ஒரு சந்தேகம் ஜனாதிபதியிடம் உட்கிடையாக இருந்துவருவதனால்தான் ரிஷாட் பதியுதீனை சட்டை செய்துகொள்ளாது தட்டிக்கழித்துவந்திருப்பதன் பின்புலமாக இருக்கக் கூடும் என்று நாம் யூகிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

வில்பத்து விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு தீர்வைப் பெறுவதாக இருந்தால் நீதிமன்றங்களுக்கு அப்பால், ஜனாதிபதியின் தாட்சண்யம் அதற்கு தேவையாக இருக்கின்றது. ஜனாதிபதியாக அவர் இருப்பது மாத்திரமன்றி அவரிடம் இருக்கின்ற அமைச்சோடும் இந்த வில்பத்து விவகாரம் தொடர்புபடுகின்ற ஒன்றுமாகும்.

அப்படியானால் அவர் நினைத்தால் இவ்விவகராத்தை சரியான முறையில் ஆய்வுக்குட்படுத்தி முஸ்லிம் மக்களின் வாழ்நிலங்களை இல்லாமல் ஒழிக்கின்ற தொழிற்பாட்டைச் செய்யாது அவர் விட்டிருக்க முடியும். அவ்வாறன்றி தீர்வு என்பதில் பெரும்பகுதி ஜனாதிபதியின் கரங்களிலேயே தங்கியிருந்தும் தவித்திருக்கின்றார் என்பது ஒரு வெளிப்படையான பாகுபாட்டைக் காட்டுகின்றது.

எனவே ரிஷாத் பதியுதீன் இது விடயத்தில் பத்திரிகையாளர் மாநாடுகளையும் பாராளுமன்ற உரைகளையும் மேற்கொண்ட முன்னெடுப்புக்களுக்கு அப்பால், ஜனாதிபதியுடன் நேரடியாகவும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் இந்த விவகாரத்தை கடுமையாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றோம் என்றால் இப்பிரச்சனையில் தீர்வு ஏற்படுவதற்கான ஏதுக்களின் பெரும்பகுதிகள் ஜனாதிபதியிடம்தான் இருந்திருக்கின்றது.

ஆயின் வெள்ளம் வரும் முன் அணை கட்டுவது போல் கடந்த நவம்பரில் ஜனாதிபதியினால் அறிவிப்புச் செய்யப்பட்டவுடன் இவ்வாறான கோணங்களில் இதனை அணுகி தீர்த்துக்கொள்வதற்கு பெரிதும் பங்காற்றியிருக்க வேண்டும். இந்தக் கோணத்திலான முயற்சிகளின் பதிவு அதிகம் நடைபெறவில்லை என்பதுதான் இன்றுவரைக்கான றிசாத் பதியுதீனின் நிகழ்வுகளின் தடயமாகும்.

இதுவரை தான் தனியாகப் போராடிய ஒரு விடயத்தில் தனக்கு பக்கபலமாக முஸ்லிம் கட்சிகளின் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கைகொடுக்க முன்வந்திருப்பதனால் மாத்திரம் இப்பிரச்சனை விரைவான ஒரு சுமூகத் தீர்வுக்கு வந்துவிடும் என்று வில்பத்து பிரச்சனையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற நமது முஸ்லிம் மக்கள் நம்புவார்களானால் அது ஒரு வெறும் பூச்சியமாகவும் கனவாகவுமே அமையும்.

ஏனெனில் எவ்வாறு ரிஷாத் பதியுதீன் இந்த விவகாரத்தில் பின்னடைவுகளைக் கொண்டியங்கினாரோ அதே பிற்போக்கு நிலைதான் ரவூப் ஹக்கீமின் இணைவின் பின்னரும் இவ்விவகாரம் நகர்ந்து செல்கின்றது. இது இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதில் காலதாமதங்களையே சந்திக்கவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய நமது நாட்டு அரசியல் சூழ்நிலை என்பது இரண்டு பிரதான பெருந்தேசியக் கொள்கையுடைய பெரும்பான்மைக் கட்சிகளின் இணைவோடு அமைந்து ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கின்றது. அவ்வாறானால் எந்தத் தீர்வு ஏற்படுவதாக இருந்தாலும் அவ்விரு கட்சிகளினதும் தலைமைத்துவங்களின் இசைவுகள் அந்த விவகாரத்தில் இருந்தால் மாத்திரமே தீர்வுகளை எய்திக்கொள்ள முடியும் என்பது யதார்த்தபூர்வமான நிலையாகும்.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களை வில்லத்தனம் உடையவர்களாக பார்க்கின்ற ஒரு நிலைதான் அவரது இதுவரையான செயற்பாடுகள் காட்டிநிற்கின்றன. இதற்கு முண்டுகொடுப்பது போல்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விவகாரத்தில் கடைப்பிடித்து வருகின்ற மௌனம் அமைந்திருக்கின்றது. ஜனாதிபதியின் வில்லத்தனமோ பிரதமரின் மௌன மொழியோ இவ்விவகாரத்தில் நமக்குத் தீர்வைத் தந்துவிடப்போவதில்லை.

உண்மையில் பிரதமரின் மௌனம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு வலுவையும் பலத்தையும் கொடுக்குமே அன்றி மாறாக முஸ்லிம்களின் பக்கம் தேவைப்படுகின்ற நியாயத்தைக் கொண்டுவருவதற்கு வழிகாட்டாது. இதனை நாம் உணர்ந்துகொள்வதில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு தடுமாற்றம் என்பது பிரதமர் ரணில் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் வழங்கி வருகின்ற ஆதரவு நிலையைக் கூட்டிக்கொண்டே செல்கின்ற சாதகத்தன்மைக்கே உதவும். இதற்காகவே வில்பத்துப் பிரச்சினையில் பிரதமர் மௌனம் சாதித்துக் கொண்டிருப்பதன் இரகசியமாக இருக்கக்கூடும்.

வில்பத்துப் பிரச்சினையை முன்னிறுத்தி ஜனாதிபதியை கண்டிப்பதற்கு எடுக்கின்ற முஸ்லிம் தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் பிரதமரை கண்டிப்பதில், காட்டப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த விவகாரத்தில் இப்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ரவூப் ஹக்கீம் ஏலவே பங்களித்த ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவரும் தங்களது எதிர்கால அரசியல் நலன் கருதி சிலவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற நிலை ஏற்படலாம் என்கின்ற ஐயத்தின் அடிப்படையில் பிரதமரை விமர்சித்துக்கொள்ளாத ஒரு போக்கை கடைப்பிடிக்கின்றனரா என்கின்ற ஒரு சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

நியாயமாகப் பார்த்தால் முஸ்லிம்களுடைய வில்பத்து காணி விவகாரத்தில் பெரும் கட்சி சார்ந்த ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கோணங்களில் ஒரே கொள்கையை அதாவது முஸ்லிம் மக்களின் வாழ் நிலங்களை கபளீகரம் செய்து காடுகளாக அடையாளப்படுத்துவதில் இணைந்து செயலாற்றிவருவதையே நமக்கு தெரியப்படுத்துகின்றது.

நமது முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் வில்பத்து விடயத்தில் ஒரே கருத்தை முன்வைப்பவர்களாகவும் அதேநேரம் அம்மக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை பலப்படுத்தும் வகையில் இப்பிரதேச மக்கள் அடையாளப் போராட்டங்களை தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி தமது குடியியல் சமூகத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்களும் இதற்கான ஆதரவை வெளிப்படையாக நல்கக்கூடியவைகளாக இணைந்து இயங்குவதற்கு முன்வர வேண்டும்.

இது வடபுலத்து முஸ்லிம்களின் பிரச்சனை. அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், இலங்கையில் பரவி வாழ்கின்ற முஸ்லிம்கள் நாடுதழுவிய ரீதியில் இவ்விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது அதற்கு இந்நாட்டில் உள்ள பெரும் கட்சிகள் துணையாக இருக்கின்றது என்பதைக் கண்டித்தும் நமது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் முகமாகவும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமது எதிர்ப்பு அடையாளத்தினை ஓர் அமைதிப் போராட்டமாக ஒரு நாளாவது நாடு தழுவியதாக முன்னெடுப்பதற்குத் துணிய வேண்டும்.

இத்தோடு நமது முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் இனி வரக்கூடிய அமைச்சரவைக் கூட்டங்களில் வில்பத்து விவகாரத்துக்கு காரணமாக அமைந்த அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்று முஸ்லிம்களுக்குத் தீர்வு வழங்குவதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

இதற்காக நம்நாட்டின் பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையினை தீர்வைப் பெற்றுத்தரும் வகையில் இயங்கச் செய்ய வைக்கின்ற கருத்தாடல்களை அவரவர்களின் கட்சி மட்டத்தில் ஏற்படுத்துவதற்கான முன்னகர்வுகளைச் செய்தாக வேண்டும்.

அதேபோன்று முஸ்லிம் தனிக் கட்சிகள் என்ற வகையில் இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, பிரதிநிதித்துவப்படுத்தாத எல்லா தலைவர்களும் ஒன்றிணைந்து பொதுவான ஒன்றித்த எதிர்ப்பாக வில்பத்து விடயத்தில் தமது கண்டனங்களைத் தெரிவிப்பதற்கு தங்களை தயார்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் சிலவேளை நமது இந்த வில்பத்து விவகாரத்தில் ஒரு தீர்வு நிலையை அடைவதற்கு பெரும் கட்சிகளை நிர்ப்பந்திக்கக் கூடும்.

இந்நகர்வு இந்த வில்பத்து விவகாரத்துக்கு மாத்திரமான ஒன்றாக அன்றி, முஸ்லிம் மக்களாகிய நாம் இன்று எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கையாளவேண்டிய ஒரு வழிமுறையாக இதனைப் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நாம் அடைந்திருக்கின்றோம் என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த உணர்தல்தான் நம்மை உன்னதமான நிலையை நோக்கிச் செல்ல துணையாக வரும்.

நமது நாட்டில் அமைந்துவந்திருக்கின்ற ஆட்சியாளர்கள் பெரும் சிங்களத்தேசிய வாதத்தை அடியொற்றியே தமது சார்பு நிலையை காட்டிவருவதில் தங்களை என்றும் பின்னிற்காத ஒரு பண்பை நாம் கண்டுவருகின்றோம். இந்த சூழ்நிலைகளை தவிர்த்துக்கொள்ள முடியாத ஒன்றாக நாம் அனுபவித்தும் வருகின்றோம். இந்த இன்னல்கள் கடந்த காலங்களைப் பார்க்கிலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊடுருவி தாக்கம் செலுத்துவதை நாம் அவதானித்தும் வருகின்றோம்.

இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை நாம் எதிர்கொண்டு நமக்குத் தேவையான மாற்றங்களையும் தீர்வுகளையும் அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிமுறைமைகளை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயக் காலத்தில் நாம் இன்று இருந்து வருகின்றோம்.

அதிலும் குறிப்பாக இந்த நாட்டில் காணப்படுகின்ற இனப்பிரச்சனைக்கான தீர்வில் புதிய கோணத்திலான அரசியல் நகர்வுகளையும் ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் முறை சீர்திருத்தங்கள், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையில் உள்ள கடுமைகளை ஒழிப்பது போன்ற நல்ல நகர்வுகளை நோக்கி பயணிப்பதாகக் கூறிக்கொள்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில்தான் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை நசுக்கிக்கொள்கின்ற வகையிலான அணுகுமுறைகளை நம் மீது உபயோகிப்பதற்கு முனைகின்ற எத்தனிப்புகளையும் காண்கின்றோம்.

இத்தகைய நெருக்கடிகளையும் நமது நில அபகரிப்புக்களையும் எதிர்த்து குரல்கொடுப்பதோடு நின்றுவிடாது, நம்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இனக்குரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்கும் அரசியல் ரீதியாக நமது பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்புவைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகளை முறியடிப்பதற்கும் நாம் எவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமோ அதனை ஒருமித்த குரலாகவும் ஒன்றித்த கரங்களாகவும் அவசர அவசியமான இயங்கியலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்தத் தருணத்தை நாம் புரிந்து அதற்கு ஏற்ற முறையிலான மாற்றீடுகளைத் தேடாத வரை நாம் மட்டும் அன்றி நமது எதிர்காலச் சந்ததிகளும் தொடர்ந்தேர்ச்சியான பேரினவாத ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைமைகளுக்குள் அகப்பட்டு அல்லாட வேண்டிய துன்பவியலில் இருந்து விடுதலையும், விமோஷனமும் கிடையாது என்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியுள்ளது.

எம்.எம்.எம்.நூறுல் ஹக்
சாய்ந்தமருது-05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*