மீதொட்டமுல்ல குப்பையினால் பாரிய உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு மஹிந்தவும் கோட்டாவுமே காரணம்!

Mujiburahman

மீதொட்டமுல்ல குப்பை விவகாரத்தை வைத்து வாசுதேவ நாணாயக்கார மக்களை திசை திருப்பும் தனது ஏமாற்று அரசியல் வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதாகவும், தோல்வியில் துவண்டு போயிருக்கும் மஹிந்த அணியின் வங்குரோத்துத் தனத்தை மூடி மறைத்துக் கொள்ள மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவு சம்பவத்தை வைத்து நல்லாட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சி செய்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குற்றம் சாட்டியுடுள்ளார்.

மீதொட்டமுல்லை குப்பை விவகாரம் தொடர்பாக, தன்னை பதவி விலகுமாறு வாசுதேவ நாணாயக்கார கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக முஜீபுர் றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாசுதேவவின் இந்தக் கருத்து  புத்தி சாதுரியமற்ற ஒருவரின் நகைப்புக்கிடமான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வாசுதேவ நாணாயக்கார அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்த கடந்த சந்திரிக்கா, மஹிந்த இரண்டு தசாப்த ஆட்சியே குப்பை பிரச்சினையை உருவாக்கிய ஆட்சிகளாகும்.

இந்தப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் வழங்காது, மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்காது பிரச்சினையை இழுத்தடித்த பெருமை இவர்களையே சாரும். இந்தப் பிரச்சினைக்கான முழுப்பொறுப்பையும்  அந்த இரண்டு ஆட்சியாளர்களும் அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த வாசுதேவ போன்றவர்களும் ஏற்க வேண்டும். அதை விடுத்து அண்மையில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சியின் மீது பழியை சுமத்தி சுகம் காணும் கீழ்மட்ட அரசியலை வாசுதேவ போன்றோர் செய்து வருகின்றனர்.

இவர்கள் இருபது வருடங்களில் தீர்க்காத பிரச்சினையை இரண்டு வருடங்களில் தீர்க்க வேண்டும் என்று கூறி இருப்பது எவ்வளவு அறிவீனமானது  என்பதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாடுகள், ஊழல், மோசடி, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற செயற்பாடுகளை  அங்கீகரித்துக் கொண்டு மஹிந்தவின் அராஜகங்களுக்கு துணை நின்றதோடு மஹிந்தவின் எந்தக் கருத்தையும் எதிர்ப்பின்றி ஆதரித்த வாசுதேவ நாணாயக்கார இன்று தன்னை ஒரு உத்தம புத்திரன் என்று காட்டிக்கொள்ளவும், மஹிந்தவின் அராஜக ஆட்சியை மீண்டும் உருவாக்கவும் மீதொட்டமுல்ல பிரச்சினையை கையிலெடுத்துள்ளார் என்பது புலனாகிறது.

மஹிந்தவின் அராஜகத்திற்கு துணை போன அவரின் போலி சமதர்மவாதம் சாயம் வெளுத்து மக்கள் வெறுப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், செல்லாக் காசாகியுள்ள  தனது மவுசை மீண்டும் வளர்த்தெடுக்கும் நப்பாசையில் நயவஞ்சகத்தனமான தனது நடிப்பை மேடையேற்றி வருகிறார் வாசு.  கடந்த ஆட்சியின் அசிங்கங்களை மூடி மறைக்க நல்லாட்சியின் மீதான  வசைபாடலையே இவர் வழக்கமாக்கி வருகிறார்.

எனவே இன்று மீதொட்டமுல்ல மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் வாசுதேவ நாணயக்காரதான்  நிகழ்ந்த  இந்த அனர்த்தத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதோடு, உண்மையிலேயே பதவி விலக வேண்டியவர்கள் வாசுதேவவும் அவரது எஜமானர்களுமேயாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை விவகாரத்தை பிரசாரப்படுத்தி தான் ஒரு போதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு தேடவில்லை என்றும் கூறியுள்ள முஜீபுர் றஹ்மான்,   மீதொட்டமுல்லை குப்பை பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கும், பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்கும் மஹிந்த ராஜபக்ஷவும் கோத்தாபய ராஜபக்ஷவும் அவர்களது அடிவருடிகளான வாசுதேவ போன்ற போலி சமதர்மவாதிகளுமே காரணம் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது  என்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அக்கறையுடனும்  தீவிரமாகவும் செயற்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் முஜீபுர் றஹ்மான்; குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*