அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவின் வெளியேற்றத்திற்கு யார் பொறுப்பு..?

18009064_1192125974230197_1162389847_n

–நவாஸ்–

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு செயலாளர் ஒருவர் இல்லாமையால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய அவல நிலைக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்தான் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அப் பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபாவுக்கு, அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அரசியல் நெருக்கடிகளை கொடுத்தமையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து ஹனீபா வெளியேறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கான அழைப்பிதழிலும், அந்த நிகழ்வு தொடர்பான கல்வெட்டிலும் தனது பெயர் இடம்பெறாமையினால், அப்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவுக்கு எதிரான பல நடவடிக்கையில் மாகாண அமைச்சர் நசீர் ஈடுபட்டார். அதேவேளை, நசீரின் ஆதரவாளர்களும் பிரதேச செயலாளருக்கு எதிரான கீழ்தர செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த நிகழ்வினை ரத்துச் செய்த அட்டாளைச்சேனையின் அப்போதைய பிரதேச செயலாளர் ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வருகை தருவதை முற்றாகத் தவிர்த்துக் கொண்டதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பதவியினைப் பொறுப்பேற்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா, நிருவாக சேவையில் மிக நீண்ட கால அனுபவத்தினைக் கொண்டவர் என்பதும், பிரதேச செயலாளராக அதிக காலம் பதவி வகித்து வகின்ற ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாதொருவர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து வெளியேறிச் சென்றமையானது, அப்பிரதேசத்துக்கு பாரிய இழப்பாகும் என, அட்டாளைச்சேனை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு செயலாளர் ஒருவர் இல்லாமையால் அப்பிரதேச மக்களும், அந்த அலுவலக உத்தியோகத்தர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், தனது சுயநல அரசியலுக்காக, அட்டாளைச்சேனைக்கு கிடைத்த மிகவும் சிறந்ததொரு பிரதேச செயலாளரை இல்லாமல் செய்தமை தொடர்பில், அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஊரின் நலனை கருத்திற் கொள்ளாமல் தமது அரசியலை மட்டுமே கவனத்திற் கொண்டு செயற்படுகின்ற இவ்வாறான அரசியல்வாதிகள், எதிர்வரும் தேர்தல்களில் துடைத்தெறியப்பட வேண்டும் என்று, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் மூத்த கல்விமான் ஒருவர் தெரிவித்தார்.

இன்னும் நான்கு மாதங்களில் கிழக்கு மாகாண சபை கலையவுள்ள நிலையில், இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடங்களைப் புகட்டுவதற்கான சந்தர்ப்பம், அட்டாளைச்சேனை மக்களுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அந்தக் கல்விமான் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*